Tuesday, July 16, 2013

ஆர்.எஸ்.எஸ்ஸையும், வி.ஹெச்.பியையும் தடைச் செய்ய மாயாவதி கோரிக்கை!


THSHK_PTI1_24_2013_1433351eலக்னோ:சாதி பேரணிகளை தடைச் செய்வதற்கு பதிலாக ஹிந்து மதவாத அமைப்புகளான வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் ஆகியவற்றை நீதிமன்றம் தடைச் செய்யவேண்டும் என்று பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டு சமீபத்தில் சாதி ரீதியான கூட்டம், ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. உத்தரபிரதேச முன்னாள் முதல்–மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி இதுபற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதரீதியாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்றஅமைப்புகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மதங்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்படுகின்றன. ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் துணிச்சல் இல்லை.
சாதி ரீதியான ஊர்வலங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் மதவாதத்தை தூண்டும் செயலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது தான். எனவே ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளுக்கு கோர்ட்டு தடை விதிக்குமா? எங்கள் கட்சியின் சாதி ரீதியான ஊர்வலம், கூட்டம் போன்ற இயக்கங்கள் சமுதாயங்களுக்கு, சாதிகளுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காகத் தான். இப்போது எங்கள் கட்சி சாதி ரீதியான கூட்டங்களுக்கு பதிலாக சர்வமத கூட்டங்களை நடத்தி வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி இதுபோன்ற சாதி ரீதியான இயக்கங்களை நடத்துவதன் மூலம் சமுதாயத்தில் பின்தங்கியுள்ளவர்களை மேம்படுத்துவதற்காக சமூகசேவை ஆற்றுகிறது. ஆனால் சில சுயநலவாதிகள் பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சிகளை கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இதுபோன்ற சேவைகளை செய்வது எங்கள் கட்சி மட்டும் தான். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. எங்களது ஒரே குறிக்கோளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பின்தங்கியவர்கள் மேம்படும் வரை எங்களது இந்த பணி தொடரும்.
2 வருட ஜெயில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பாரதீய ஜனதாவும், காங்கிரசும் மதத்தின் வழியாகவே வாக்குவங்கியை கவர நினைக்கிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பைசாபாத் மற்றும் அயோத்தியா ஆகிய இடங்களில் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதே இதற்கு உதாரணம்.
இதன்மூலம் அவர்கள் தேர்தலுக்கு முன் ஒரு மதவாத பதற்றத்தை நாட்டில் ஏற்படுத்த முனைகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு அரசியல் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளை கவனத்தில் எடுத்து அதனடிப்படையில் மத பிரிவினைவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நரேந்திரமோடி இந்து தேசியவாதி என்று கூறுவதை ஏற்கமுடியாது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. எந்த தலைவரும் இந்து தேசியவாதி என்று கூறிக்கொள்வதை ஏற்கமுடியாது.
ஆந்திர மாநிலத்தை பிரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல உத்தரபிரதேசத்தையும் 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். இந்திய எல்லை பகுதியில் சீனா ஊடுருவலை தடுக்க மத்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நரேந்திர மோடியின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சியின் எம்.பி. விஜய்பகதூர்சிங்கின் கருத்து அவரது சொந்த கருத்து என்பதால் அவர் இன்னும் கட்சியில் நீடிக்கிறார். தொடர்ந்து அவர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார். இது அவருக்கு கடைசி எச்சரிக்கை. இவ்வாறு மாயாவதி கூறினார்.

No comments:

Post a Comment