Tuesday, July 16, 2013

சாதனை படைத்த அப்ரிடி


* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் ஆல்–ரவுண்டர் அப்ரிடி, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வெய்ன் பிராவோவை வீழ்த்தியது அவருக்கு 350–வது விக்கெட்டாகும். 355–வது ஒருநாள் போட்டியில் ஆடிய அப்ரிடி மொத்தம் 355 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் மொத்தம் 7,277 ரன்னும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன் மற்றும் 350–க்கு அதிகமான விக்கெட்டும் ஒருசேர எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை அப்ரிடி பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்னும் 300–க்கு மேல் விக்கெட்டும் எடுத்த மற்றொரு வீரர் இலங்கையை சேர்ந்த ஜெயசூர்யா (445 ஒருநாள் போட்டியில் ஆடி 13,430 ரன்கள், 323 விக்கெட்டுகள்) ஆவார்.
ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய உலக வீரர்கள் வரிசையில் அப்ரிடி 8–வது இடத்தை பிடித்து இருப்பதுடன், 3–வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்களில் வாசிம் அக்ரம் (502 விக்கெட்டுகள்), வாக்கர் யூனிஸ் (416 விக்கெட்டுகள்) அப்ரிடியை விட முன்னிலை வகிக்கின்றனர்.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் அப்ரிடி 76 ரன் எடுத்ததுடன், 7 விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். ஒரு ஆட்டத்தில் 50 ரன்னும், 5 விக்கெட்டுக்கு மேலும் ஒரே நேரத்தில் அப்ரிடி எடுப்பது இது 3–வது முறையாகும். மற்ற எந்தவொரு வீரரும் ஒருமுறைக்கு மேல் இதுபோல் எடுத்தது கிடையாது. இது ஒருநாள் போட்டியில் நடைபெறும் 16–வது நிகழ்வாகும்.
* அப்ரிடி 12 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியது ஒருநாள் போட்டியில் 2–வது சிறந்த பந்து வீச்சாகும். அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 2001–ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சமந்தா வாஸ் 19 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஒருநாள் போட்டியில் சிறப்பான பந்து வீச்சாக இருக்கிறது.
* வெஸ்ட் இண்டீஸ் அணி 98 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்னுக்குள் ஆட்டம் இழப்பது இது 8–வது முறையாகும்.

No comments:

Post a Comment