Monday, January 14, 2013

மரணப்படுக்கையில் போராடும் சிறைவாசியை விடுதலை செய் - குவைத் இயக்கங்கள் கோரிக்கை!


குவைத்: கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள அபுதாஹீர் என்பவர் SLE எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று குவைத்தில் இயங்கி வரும் 'இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு' சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 11-01-2013 வெள்ளியன்று குவைத் தலைநகரில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் உரையாற்றிய பல்வேறு அமைப்புக்களின் தலைவர்கள், "கோவை சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள அபுதாஹீர், SLE எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவரது கிட்னி, இருதயம், உள்ளிட்ட பல முக்கிய பாகங்கள் செயலிழந்து வரும் நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்கள் பரோல் வழங்கியது. இவ்வுத்தரவை அமுல்படுத்தி அபுதாஹீரை பரோலில் அனுப்பவேண்டிய தமிழக அரசும், சிறைத்துறையும் பாரபட்சம் காட்டி வருகின்றன.
அபுதாஹீரின் பரோல் ஆணைக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவரை உடனடியாக பரோலில் விடுமாறு மாநில தலைமைச் செயலாளருக்கும் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தமிழக அரசு அபுதாஹீரின் விசயத்தில் அலட்சியம் காட்டி வருவதால் தமிழக அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கை கைவிட வேண்டும்" என்று கூறினர்.
இந்நிகழ்ச்சியில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை, இஸ்லாமிய வழிகாட்டி மையம், குவைத் இந்தியா ஃபிரடிர்நிட்டி ஃபார்ம், காயிதே மில்லத் பேரவை, இஸ்லாமிய மாணவர் பேரவை ஆகிய அமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அபுதாஹிரை விடுதலை செய்ய தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று கூடி, தமிழக அரசை வலியுறுத்தி பல வீரியமிக்க போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் அதற்காக குவைத்தில் இருக்கும் தமிழக இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகள் தாங்கள் சார்ந்து இருக்கும் அமைப்புகள் மற்றும் கட்சிகளை வலியுறுத்தவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றபட்டன. மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் அல்லது FAX அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment