
புதுடெல்லி:பாலியல் குற்றங்களுக்கான தண்டனை வழங்கும் சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கோரியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளுக்கும் சுஷீல்குமார் ஷிண்டே எழுதியுள்ள கடித விவரம்:
டெல்லியில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதை அடுத்து பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஆராய நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் டிசம்பர்23-ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி லெய்லா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கமிட்டி தனி நபர், அரசு சாரா நிறுவனங்கள், சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை ஜனவரி முதல் வாரத்துக்குள் தெரிவிக்கலாம்.
இப்போதைய சூழ்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதுதான் பலருடைய கருத்து. அதற்கேற்றாற்போல் நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஜே எஸ் வர்மா கமிட்டி ஜனவரி மாத இறுதியில் அரசுக்கு பரிந்துரைக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சுஷீல்குமார் ஷிண்டே.
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின்படி பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் 23 வயது பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்ததையடுத்து பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.
No comments:
Post a Comment