Saturday, January 26, 2013

வர்மா குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்க முடியாதாம்! – மத்திய அரசின் இரட்டை வேடம்!


புதுடெல்லி:பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தில் வர்மா குழு அளித்துள்ள அனைத்து பரிந்துரைகளையும் ஏற்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து நீதிபதி வர்மா குழு தனது பரிந்துரையை புதன்கிழமை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸாருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கக் கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் வியாழக்கிழமை கூறுகையில், “ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மறு ஆய்வு செய்வது கடினமான விஷயம். அது வேறுபட்ட பின்னணியைக் கொண்டது. இதுபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஏற்கத்தக்கதல்ல. நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தடை விதிக்கலாம். இதை சட்ட அமைச்சராக சொல்லவில்லை. தனிப்பட்ட நபராக என் கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்றார் குமார்.
டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமையில் பலியான மாணவிக்காக நீலிக்கண்ணீர் வடித்த மத்திய அரசு, வடகிழக்கு மற்றும் எல்லை மாநிலங்களில் வாழும் பெண்களின் மானத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கு அப்ஸா என்ற கொடிய சட்டத்தை வாபஸ் பெற மறுப்பதன் மூலம் பெண்கள் பாதுகாப்பில் இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது.

No comments:

Post a Comment