Thursday, December 20, 2012

பாலியல் கொடுமை: விசாரணை அறிக்கையில் பி.பி.சி மீது கடுமையான விமர்சனம்!


bbc news
லண்டன்:பி.பி.சியின் முன்னாள் நிகழ்ச்சி வழங்குனர் ஜிம்மி சவெயில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்திய குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. சவெயிலுக்கு எதிரான செய்தியை மூடி மறைத்ததில் பி.பி.சிக்கு பங்கு இல்லை என்றாலும் பி.பி.சி நிர்வாகத்தின் தோல்வியை காட்டுவதாக முன்னாள் ஸ்கை நியூஸ் தலைவர் நிக் பொல்லாட் சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது.
பி.பி.சி நிர்வாகத்தில் இவ்விவகாரத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த பி.பி.சி, பொல்லாடின் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. முன்னாள் அரசியல் தலைவர் மக் ஆல்பின் சிறார்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என்று செய்தி வழங்கிய பி.பி.சியின் நடவடிக்கை கடுமையான தவறு என்று மற்றொரு விசாரணை அறிக்கை கூறுகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பி.பி.சியின் செயல் இயக்குநர் டிம் டேவி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் சவெயிலின் பாலியல் கொடுமை குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் குழு, லண்டனில் ஒருவரை கைது செய்துள்ளது. 70 வயதான இந்நபரைக்குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, பொல்லாடின் கடுமையான அறிக்கையை அடுத்து பிபிசியின் உயர் முகாமையாளர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் செய்திப்பிரிவின் துணை ஆசிரியரான ஸ்டீபன் மிட்சேல் அவர்கள் அடுத்த வருடம் தனது பதவியில் இருந்து விலகுவார். நியூஸ் நைட் நிகழ்ச்சியின் ஆசிரியரும், துணை ஆசிரியரும் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment