
அடிஸ்-அபாபா:எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் நடந்த சூடான் – தெற்கு சூடான் இடையேயான உயர்மட்ட 10 தின பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது.
இரு நாடுகளின் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத்தை நிபந்தனையின்றி வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை இரு நாடுகளும் நிராகரித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எல்லையில் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை தெற்கு சூடான் உரிமை கோருவதாக சூடான் அதிபர் உமருல் பஷீர் குற்றம் சாட்டுகிறார். 2005-ஆம் ஆண்டு உருவாக்கிய ஒப்பந்தத்திற்கு மாற்றமாக தெற்கு சூடான் தங்களது ஐந்து பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக சூடான் பாதுகாப்பு அமைச்சர் அப்துல் ரஹீம் முஹம்மது ஹுஸைன் கூறுகிறார். இதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்போம் என பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் தெற்கு சூடான், அகண்ட சூடானில் இருந்து துண்டிக்கப்பட்டு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய அபய் உள்ளிட்ட பகுதிகளின் உரிமை யாருக்கு என்பது குறித்து அன்றைய தினமே குழப்பம் நிலவியது. கடந்த ஜனவரி மாதம் எல்லையில் சூடான் கைவசமிருந்த ஹெக்லிக் எண்ணெய் வயல்களை தெற்கு சூடான் படை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே புதிய மோதல் உருவானது. பின்னர் ஐ.நாவின் வற்புறுத்தலுக்கு இணங்க ராணுவம் அப்பகுதியில் இருந்து விலகியது.
தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அதிபர் தாபோ எம்பகியின் தலைமையில் ஆப்பிரிக்க யூனியன் முன்வந்து நடத்திய சமாதான முயற்சிகளின் பலனாக இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகின.
courtesy : www.thoothuonline.com
courtesy : www.thoothuonline.com
No comments:
Post a Comment