Sunday, June 10, 2012

ஹஸாரே குழுவின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!


புதுடெல்லி:மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட ஹஸாரே குழுவினரின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நேற்று(சனிக்கிழமை) நிராகரித்துவிட்டது.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஹஸாரே குழுவினர் கடந்த மாதம் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இக்கடிதத்திற்கு பதில் அளித்து பிரதமர் அலுவலக விவாரத்துறை இணை அமைச்சர் வி.நாராயணசுவாமி ஹஸாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பிரதமர் மீது குற்றம்சாட்டியுள்ளீர்கள். ஆனால் அது தொடர்பாக எந்தவிதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
அமைச்சர்கள் மீது நீங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளீர்கள். ஆனால் நமது நாட்டு சட்ட நடைமுறை, அரசியல்சாசன அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கையில் இந்த விஷயத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. இப்போது நடைமுறையில் உள்ள விசாரணை முறைகளே போதுமானது.
சிஏஜி அறிக்கை: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அது நடந்தபின் அரசியல்சாசனப்படி அரசு தனது விளக்கத்தை பொதுக் கணக்குக் குழுவிடம் அளிக்கும். அரசுத்துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமென்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment