Monday, June 11, 2012

போபால் நச்சுக் கழிவுகளை கொண்டு செல்ல 4000 கண்டெய்னருகள் தேவை!


4000 spl containers for Bhopal toxic waste- GIZ
புதுடெல்லி:போபால் விஷவாயு விபத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இன்னமும் தேங்கிக் கிடக்கும் நச்சுக் கழிவுகளை கொண்டு செல்ல ஐ.நாவால் அங்கீகரிக்கப்பட்ட 4 ஆயிரம் கண்டெய்னருகளும், பயிற்சி பெற்ற நிபுணர்களும் தேவை என்று ஜெர்மனி நாட்டு நிறுவனமான கிஸ்(GIZ) தெரிவித்துள்ளது.
345 மெட்ரிக் டன் எடைகொண்ட நச்சுக் கழிவுகளை நீக்கம் செய்ய குளிர்காலம்தான் பாதுகாப்பானது. இதற்கு தேவையான பணியாளர்களுக்கு கிஸ் நிறுவனமே பயிற்சியை அளிக்கும்.
120 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4000-5000 கண்டய்னர்கள் தேவைப்படுகின்றன. நச்சுக் கழிவுகளை மிக வலிமையாக மூடி சீல் செய்த பிறகே ஜெர்மனிக்கு கொண்டு செல்ல முடியும் என்று கிஸ் நிறுவனத்தின் தெற்காசியா மண்டல இயக்குநர் ஹன்ஸ் ஹெச் டூப் கூறுகிறார். 30 பணியாளர்கள் இதற்கு தேவை. பணியாளர்களை கண்டுபிடித்து சிறப்பு முகமூடியும், இதர பாதுகாப்பு உபகரணங்களை அணியச்செய்து இப்பணிக்காக பயிற்சி அளிக்கவேண்டும்.
வெப்பநிலை மிகவும் குறைந்த குளிர்கால இரவுகளில் மட்டுமே நச்சுக் கழிவுகளை நீக்கம் செய்ய இயலும். பாதுகாப்பு காரணங்களால் இரண்டு மணிநேரம் இடைவேளை கொண்ட ஷிஃப்டுகளில் பணிகள் நடைபெறும் என்று ஹன்ஸ் கூறினார்.
போபால் விஷவாயு விபத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தொழிற்சாலையில் இன்னமும் தேங்கிக் கிடக்கும் 350 டன் நச்சுக் கழிவுகளை ஜெர்மனிக்கு கொண்டு சென்று அழிப்பதற்கும், அதனைக் கொண்டுசெல்ல ரூ.25 கோடி வழங்கவும் மத்திய அமைச்சர்கள் குழு நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது.
90 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை பேக் செய்த உடன் விமானத்தில் கொண்டு செல்லபடும். நச்சுக் கழிவுகளை அழிக்கும் இடம் குறித்து பின்னர் முடிவுச் செய்யப்படும். ஆபத்து நிறைந்த நச்சுக் கழிவுகளை எங்கே அழிப்பது குறித்து தீர்மானம் பின்னர் எடுக்கப்படும்.
பாதுகாப்பாக நச்சுக் கழிவுகளை அழிக்கும் இடமாக அது அமையவேண்டும். மக்களுக்கோ, சுற்றுச் சூழலுக்கோ ஆபத்தை விளைவிப்பதாக அது அமையக் கூடாது. ஜெர்மனியின் சூழல்களும் இதற்கு ஒத்து வரவேண்டும் என்று ஹன்ஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment