Thursday, May 17, 2012

நக்பா நினைவில் ஃபலஸ்தீன் மக்கள்!


Palestinians Mark Nakba Day
காஸ்ஸா/ராமல்லா:பிறந்த மண்ணில் இருந்து உடுத்த துணியுடன் விரட்டியடிக்கப்பட்ட துயர நிகழ்வின் 64-வது நினைவு தினத்தை(நக்பா) ஃபலஸ்தீன் மக்கள் அனுஷ்டித்தனர்.
1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற யூத சியோனிச அரசு முஸ்லிம்களின் புண்ணியஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் மண்ணில் ஏகாதிபத்திய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நிறுவப்பட்டதன் மரணிக்காத நினைவலைகளை ஃபலஸ்தீன் மக்கள் தலைமுறைகளுக்கு பகிர்ந்து வருகின்றார்கள்.
கடந்த ஆண்டு இதே தினத்தில் சிரியா மற்றும் லெபனானில் இருந்து ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவர்களை இஸ்ரேல் ராணுவம் கூட்டுப் படுகொலைச் செய்தது. சிரியாவைச் சார்ந்த நான்கு பேரும், லெபனானைச் சார்ந்த 10 பேரும் பலியான வேளையில் சுய பாதுகாப்பு என தனது அட்டூழியத்தை இஸ்ரேல் நியாயப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் மே 15-ஆம் தேதி நக்பா தினத்தையொட்டி ஃபலஸ்தீன் மக்கள் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களும், நினைவு நிகழ்ச்சிகளும் நடத்துவது உண்டு.
‘பாதுகாப்பின்’ பெயரால் இஸ்ரேல் கூடுதல் ராணுவத்தினரை நிறுத்துவதும் வழக்கமாகும்.
கிழக்கு ஜெருசலமில் இஸ்ஸாவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும், இஸ்ரேல் போலீசாரும் மோதலில் ஈடுபட்டனர். பொறுமையிழந்த மக்கள் போலீசார் மீது கல்வீசினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
காஸ்ஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடந்ததாக போலீஸ் செய்தி தொடர்பாளர் மிக்கி ரோஸன்ஃபெல்ட் கூறுகிறார். மேற்குகரை நகரங்களான ராமல்லா, ஒஃபர், கலாந்தியா மற்றும் கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன.
காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா மக்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.
அரப்-இஸ்ரேல் போரும், இஸ்ரேலின் உருவாக்கமும் சின்னாப் பின்னப்படுத்திய ஃபலஸ்தீன் மக்களில் 47 லட்சம் பேருக்கு வீடு இல்லை என்பது தற்போதைய புள்ளிவிபரமாகும். 1,60,000 ஃபலஸ்தீன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கின்றனர். எல்லைப்புற நாடுகளிலும் இதே எண்ணிக்கையிலான மக்கள் வசித்து வருகின்றனர். மீதமுள்ளவர் காஸ்ஸாவிலும், ராமல்லாவிலும் வசிக்கின்றனர். இஸ்ரேலில் அரபு வம்சா வழியைச் சார்ந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹயர் அரப் மானிட்டரிங் கமிட்டி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
ஃபலஸ்தீன் மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களுக்கு திரும்பச் செல்லவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment