Friday, May 18, 2012

காவல்துறையினர் பதிவுச்செய்யும் மரண வாக்குமூலம் செல்லும்: உச்சநீதிமன்றம்!


supreme court of india
புதுடெல்லி:காவல்துறையினர் பதிவுச்செய்யும் மரண வாக்குமூலம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மஹராஷ்ட்ரா மாநிலத்தைச் சார்ந்த சலீம் குலாப் என்பவர் தனது மனைவி நஷாபீயை எரித்துக் கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதனை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சலீம் மேல்முறையீடு செய்திருந்தார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், போலீஸ் காவலர் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படும் நேரத்தில், அவர் சுய நினைவில் இல்லை என்றும் சலீம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்வதந்தர் குமார், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு, சலீமின் மனுவைத் தள்ளுபடி செய்து, ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
“வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அந்தப் பெண் சுய நினைவுடன் இருந்தார் என்பதற்கு டாக்டர் தெளிவாகச் சான்றளித்திருக்கிறார்” என்று நீதிபதிகள் கூறினர்.
மாஜிஸ்திரேட்டுக்குப் பதிலாக போலீஸ் காவலர் பதிவு செய்தார் என்பதற்காக மட்டுமே மரண வாக்குமூலம் அதன் தன்மையை இழந்துவிடாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment