Saturday, March 17, 2012

சிரியாவில் வளைகுடா நாடுகளின் தூதரகங்கள் மூடல்!


ரியாத்/டமாஸ்கஸ்:சவூதி அரேபியாவை தொடர்ந்து வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) இதர உறுப்பு நாடுகள் சிரியாவில் தங்களது தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளன.
ஜனநாயகரீதியிலான போராட்டம் சிரியாவில் துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்த பொழுதும் சிவிலியன்களை கூட்டுப் படுகொலைச் செய்வதை சிரியா அரசு தொடரும் வேளையில் டமாஸ்கஸில் தூதரகங்களை மூட தீர்மானித்ததாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர் அப்துல் லத்தீஃப் அல் ஸயானி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சவூதி அரேபியாவும், பஹ்ரைனும் தங்களின் தூதரகங்களை மூடியுள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் முடிவின் மூலம் சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஒமான், கத்தர், யு.ஏ.இ ஆகிய நாடுகளின் தூதரகங்கள் சிரியாவில் மூடப்படுகின்றன.
சிரியாவின் பிரச்சனையை தீர்க்க அரபு லீக் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்க மறுத்ததுடன், ராணுவம் சிவிலியன்களை கூட்டுப் படுகொலைச் செய்வதை தொடர்வதற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, சிரியாவில் வெளிநாட்டு ராணுவம் தலையிட கோரி எதிர்கட்சியினர் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அரபு லீக்-ஐ.நா மத்தியஸ்தர் கோஃபி அன்னன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் முன்பு சிரியாவின் மோதல் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிப்பதற்குன் முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிரியா போராட்டம் துவங்கி ஓர் ஆண்டு நிறைவுற்ற பின்னர் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அதேவேளையில், நேற்றும் சிரியாவில் ராணுவம் பலத்த தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலை தொடர்ந்து எல்லை நகரமான இத்லிபில் இருந்து ஆயிரக்கணக்கானோர் துருக்கிக்கு புலன் பெயர்ந்துள்ளதாக எதிர்கட்சி அமைப்புகளை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. அப்பகுதியில் இருந்து 45 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளதாக எதிர்கட்சி அமைப்பான சிரியன் அப்ஸர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அறிவித்துள்ளது.
மோதல் அதிகரித்துவரும் சூழலில் தங்களது நாட்டு குடிமக்கள் அவசரமாக நாடு திரும்ப துருக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment