கடந்த திங்கட்கிழமை (05.03.2012) அதிகாலையில் ஸில்வான் நகருக்குக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை, அப்பிரதேசத்தில் உள்ள பலஸ்தீனர்களின் வீடுகள்மீது கடும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
தேடுதல்வேட்டை என்ற போர்வையில் பலஸ்தீன் வீடுகளுக்குள் அடாவடியாய்ப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்கள் ஸதாத் அல் அவார் (வயது 12), ஷுஹைப் (வயது 13), இல்யாஸ் அல் அவார் (வயது 14), அஹ்மத் ஸலாஹ் (வயது 14), இஸ்லாம் அல் அவார் (வயது 17) ஆகிய ஐந்து சிறுவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
வதீ ஹில்வா தகவல் நிலையப் பணிப்பாளர் ஜவாத் ஷியாம் இதுகுறித்துத் தெரிவிக்கும்போது, "ஸில்வான் பிரதேசத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பல்வேறு அடாவடித்தனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காரணமற்ற கைதுகள், கடத்தல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இரு வாரங்களுக்கு முன்னர் வதீ ஹில்வா கால்பந்தாட்ட மைதானம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் புல்டோஸர்கள் மூலம் குண்டும் குழியும் உள்ளதாகச் சிதைக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனர்களின் அன்றாட நடமாட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர்க் கால்வாய்கள் பலஸ்தீன் குடியிருப்புப் பிரதேசங்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டுள்ளன.
இப்படித் தொடர்ந்தும் பல்வேறு இடையூறுகளைச் செய்துவருவதன் மூலம் இப்பிரதேசத்தில் வாழும் மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களைத் தமது இருப்பிடங்களைவிட்டு வெளியேற்றுவதே ஆக்கிரமிப்பாளர்களின் திட்டம். ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்கள் அக்கம்பக்கத்துப் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இந்தச் சிறுவர்களின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து ஸில்வான் பிரதேசத்தில் பெரும் பதற்றம் நிலவிவருகின்றது
No comments:
Post a Comment