
புதுடெல்லி:சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல் வாட் மீது விசாரணை நடத்துவதற்கான குஜராத் மோடி அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது. டீஸ்டாவிற்கு எதிரான வழக்கு பொய் என்றும், அவரை துன்புறுத்தவே இவ்வழக்கு சுமத்தப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
2002 ஆம் ஆண்டு முஸ்லிம் இனப் படுகொலையில் கொலைச் செய்யப்பட்டவர்களின் அடக்கஸ்தலங்களை சட்டவிரோதமாக திறந்து பரிசோதித்தார் என்பது டீஸ்டாவின் மீது குஜராத் மோடி அரசு சுமத்திய குற்றச்சாட்டாகும்.
இதுத்தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) செல்லாததாக அறிவிக்க கோரி டீஸ்டா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.
‘நூறு சதவீதம் பொய்யான இவ்வழக்கு மனுதாரரை(டீஸ்டா) துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ளது’ என்று மனுவை பரிசீலித்த நீதிபதிகளான ரஞ்சனா பிரகாஷ் தேசாய், அஃப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. இத்தகைய வழக்குகள் குஜராத் அரசுக்கு ஒருபோதும் புகழை பெற்றுத் தராது. இது முற்றிலும் பொய்யான வழக்கு. ஆனால், மனுதாரருக்கு எதிரான இதர வழக்குகளில் ஏதேனும் காரணம் இருக்கலாம்’ என்று கூறிய டிவிசன் பெஞ்ச், இனிமேல் இதுபோன்ற வழக்குகளை சுமத்தக்கூடாது என்று குஜராத் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் உத்தரவிட்டது.
‘உங்களுக்கு சிறிதேனும் பொறுப்புணர்வு வேண்டும். இம்மாதிரியான வழக்குகளை போடக் கூடாது’ என்று குஜராத் அரசுக்கு உபதேசம் அளித்தது டிவிசன் பெஞ்ச்.
முன்னர் டீஸ்டாவின் மீதான வழக்கை செல்லாததாக அறிவிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பஞ்ச்மஹல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் டீஸ்டா மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடி வருபவர்தாம் சமூக ஆர்வலரான டீஸ்டா ஸெடல்வாட்.
No comments:
Post a Comment