Tuesday, January 23, 2018

டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் நீரின்றி கருகும் அபாயம்: விவசாயிகள் சங்கம் அதிர்ச்சி தகவல்



திருத்துறைப்பூண்டி: டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாய நிலையில் உள்ளது என்று  தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாகியும் கர்நாடகத்திடம் தண்ணீர் பெற்றுதர மறுத்ததின் விளைவாகவே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. மாநில அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசிடம் கேட்கும்படி கூறினால், கடிதம் எழுதியுள்ளோம் என தட்டிக் கழிக்கின்றனர்.  

கருகும் பயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் விரைந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, மத்திய அரசிடம் வலியுறுத்தி கர்நாடகாவிலிருந்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். நன்னிலத்தில் 30 எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட வேண்டிய மண்டலமாக அறிவிக்க தமிழக முதல்வர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்வதற்கு பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் காவிரி டெல்டா அழிந்து போகும் என்றார்.


No comments:

Post a Comment