கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி கூறியிருந்த தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நஜீப் ரஸாக், "மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மலேசிய விமானம் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே அதன் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பதை திட்டவட்டமாக கூற முடியும். விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகளைச் சேர்ந்த 42 விமானம், 39 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமானதும் முதலில் தென் சீன கடல் பகுதியில் தேடினோம். அந்த தேடுதல் பணியை முடித்துக் கொள்வதாக இருக்கிறோம்.
விமானம் அதன் பாதையில் இருந்து ஏன் விலகிச் சென்றது என்பதை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
செயற்கோள் தகவலகள், விமானம் வடக்கு தாய்லாந்தில் இருந்து கஸகஸ்தான் பகுதி அல்லது இந்தோனேசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம் என தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஊடகங்களில், மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானாலும் மற்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
மலேசிய அதிகாரியின் பரபரப்பு தகவல்:
மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்- 370 குறித்து விசாரிக்க மலேசிய அரசு விசாரணைக் குழு ஒன்று அமைத்திருந்தது.
இக்குழுவில் இடம் பெற்றிருந்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானத்தை ஓட்டவும், அதை நேர்த்தியாக கையாளவும் தெரிந்த ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவினரோ இணைந்து விமானத்தை கடத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது.
விமானத்தை கடத்துவதற்கு முன்னர் அதன் தொடர்பு சாதனங்களை அவர்கள் அனைத்து வைத்திருக்க வேண்டும்.
கடத்தல்காரர்கள் விமானத்தை எங்கு கொண்டு சென்றனர் என்பது மர்மமாக உள்ளது. இதுவரையிலும் கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து எவ்வித நிபந்தனைகளும் வரவில்லை" இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், காணாமல் போன மலேசிய விமான கடத்தப்பட்டதா என்பதை வெறும் ஒரு விசாரணைக் கோணமாக மட்டும் பார்க்க முடியாது. கிட்டத்தட்ட கடத்தல் உறுதியாகிவிட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
239 பேர் நிலை என்ன?
ஐந்து இந்தியர்கள் உள்ளிட்ட 239 பேருடன் சனிக்கிழமை நள்ளிரவு சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம் அடுத்த ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. அது கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப் பட்டாலும் விமானத்தின் சிதறல்களோ உடைந்த பாகங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து தேடுதல் பணியை நடத்தி வருகின்றன. விமானத்தின் வழித்தடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. பரப்பளவில் இந்தியப் பெருங்கடல் பகுதியையும் உள்ளடக்கி தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அதிகாரியும், கடத்தல் உறுதி செய்யப்படவில்லை என மலேசிய பிரதமரும் தெரிவித்துள்ளனர். விமானத்தில் சென்ற பயணிகள் நிலை தெரியாமல் உறவினர்கள் தொடர்ந்து தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
No comments:
Post a Comment