Wednesday, January 29, 2014

மக்கள் விரோத சட்டமான யு.ஏ.பி.ஏ.விற்கு எதிராக இயக்கம் உருவாக்கம்!


புதுடில்லி: மக்கள் விரோத சட்டமான யு.ஏ.பி.ஏ.விற்கு எதிராக இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத சட்டமான யு.ஏ.பி.ஏ.வை (சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம்) திரும்பப் பெற வலியுறுத்தி தேசிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்ற தீர்மானம் சமூகத் தலைவர்கள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டம் கடந்த ஜன 26 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து நடத்திச் செல்ல “யு.ஏ.பி.ஏ.விற்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு பொது தள இயக்கம் உருவாக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் தலைவராக மௌலானா முஹம்மது வாலி ரஹ்மானியும், ஒருங்கிணைப்பாளராக கமால் ஃபாரூக்கி, முஹம்மது ஷாஃபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் 80க்கும் மேற்பட்ட முன்னனி கள ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவிகளுக்காக வாதிடும் பல அறியப்பட்ட வழக்கறிஞர்கள் நாட்டின் தலைநகரத்திலிருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.
தடா, பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின் இந்த யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் பல்வேறு அப்பாவி இளைஞர்கள் போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு வருகின்றனர் என்று கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
மவ்லானா முஹம்மது வாலி ரஹ்மானி அவர்களின் தலைமை உரையுடன் கூட்டம் துவங்கப்பட்டது. அவரது உரையில் யு.ஏ.பி.ஏ. சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டிய அவசியத்தை விளக்கினார். மேலும் இந்தச் சட்டம் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
கமால் ஃபாரூக்கி வரவேற்புரை நடத்தி கூட்டத்தின் நோக்கம் மற்றும் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்று விளக்கினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர்.
என்.சி.ஹெச்.ஆர்.ஒ. துணைத் தலைவர் கே.பி. முஹம்மது ஷரீஃப் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஜனநாயக விரோத பிரிவுகளைப் பற்றிய தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
உச்சநீதிமன்ற வழங்கறிஞர் அசோக் அகர்வால் யு.ஏ.பி.ஏ.வின் வரலாற்றையும் அது வழங்கிய அதிகாரம் எவ்வாறு மக்களுக்கு விரோதமாகவும் ஆபத்தாகவும் இருக்க முடியும் என்பது பற்றியும் விளக்கினார்.
ய.ஏ.பி.ஏ.வால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கினை நடத்தி வரும் வழக்கறிஞர் மஹ்மூத் பராச்சா தனது வேதனையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் சட்டரீதியாக இந்த யு.ஏ.பி.ஏ.வை எவ்வாறு திரும்பப் பெற வைப்பது என்ற செயல்முறைத் திட்டத்தையும் விளக்கினார்.
ஜமாஅத்துல் உலமா ஹிந்த் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நியாஸ் ஃபாரூக்கி குறிப்பிடும்போது தடா மற்றும் பொடா சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் அதன் ஷரத்துக்கள் யு.ஏ.பி.ஏ. வடிவில் திரும்ப வந்துள்ளது என்று உரையாற்றினார். மேலும் மீடியா இது போன்ற செய்திகளை வெளியிடும்போது எவ்வித ஆதாரமும் இன்றி பெரும் பீதியைக் கிளப்பி தாங்களே விசாரணை நடத்தி தீர்ப்பும் கொடுத்து வருகிறது என்று கூறினார்.
ஜாமிஆ டீச்சர்ஸ் சாலிடாரிட்டி அசோசியேஷன் சார்பாக திருமதி சங்க மித்ரா மிஸ்ரா தேசிய அளவில் யு.ஏ.பி.ஏ. எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்று கூறினார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பேராசிரியர் அர்ஷி கான் தீவிரவாதம் உட்பட அனைத்து குற்றத்தையும் விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளின் பொறுப்புகள் வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நீதிபதி ஃபக்ரூதீன் அவர்கள் இது போன்ற விவாதங்கள் தேசிய அளவில் நடத்தப்பட்டு ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அம்பேத்கர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் தேஜ் சிங் உரையில் அரசியல், நீதித்துறை மற்றும் ஊடகத்தில் நிலவி வரும் தீவிரவாதத்தை நாம் தற்போது இனம் கண்டுள்ளோம் என்றும் உயர் சாதியினர் மற்றும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சில சமூகங்கள்தான் தலித்கள், முஸ்லிம்கள், ஆதிவாசிகள் ஆகியோருக்கு எதிரான கருத்தாக்கங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும் இந்த யு.ஏ.பி.ஏ.வினால் அதிகம் பாதிக்கப்படுவது மேற் கூறிய சமூகங்களே என்றும் குறிப்பிட்டார்.
ஜாமிஆ மில்லியா பேராசிரியை திருமதி ஹசீனா ஹாசியா அவர்கள் குறிப்பிடும்போது அப்பாவி இளைஞர்கள் குறி வைக்கப்பட்டு, போலி வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்பட்டு பல வருடங்கள் சிறையில் கழிக்கும் அவலத்தை எடுத்துரைத்தார்.
பீப்பிள்ஸ் அலயன்ஸ் ஃபார் டெமாக்ரசிட்டி அன்ட் செக்கூலரிசம் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநீவாஸ் ராவ் குறிப்பிடும்போது ஆங்கிலேயரின் காலத்தில் இருந்த ரவ்லத் ஆக்ட் ஐ விட யு.ஏ.பி.ஏ. கொடூரமானது என்று குறிப்பிட்டார்.
மேலும் மௌலானா செய்யது மஹ்மூத் மதனி (தலைவர், ஜம்இய்யத் உலமா இ ஹிந்த்), டாக்டர் ஜான் தயால் (அனைத்து இந்திய கிறிஸ்தவப் பேரவை), டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் (ஆசிரியர், மில்லி கெஜட்), எஸ்.ஒய். குரேஷி, டாக்டர் லெனின் ரகுவன்ஷி, இ. அபூபக்கர் (முன்னாள் தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சி), சுரேஷ் ஹைர்னார் (மஹராஷ்டிரா), நீதிபதி ஆர்.கே. அன்கோடியா, பாமன் மிஸ்ராம், வழக்கறிஞர் என்.டி. பஞ்சோலி, பாதிரியார் திரு.டொமினிக், இ.எம். அப்துர் ரஹ்மான், (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), செய்யது அக்லாக் மற்றும் ஷப்பக் சுபுஹானி (ஏ.பி.சி.ஆர்.), ஹஸ்னைன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்று மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பற்றிய கலந்துரையாடலை ஒருங்கிணைப்பாளர் கமால் ஃபாரூக்கி நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் உள்ள அரசியல் தலைவர்களிடம் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான அழுத்தங்களைக் கொடுப்பது எனவும் இதற்காக முக்கிய நபர்களை சந்திக்க தேசிய அளவில் சுற்றுப்பயணம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போஸ்டர் மற்றும் நோட்டீஸ் பிரச்சாரம் தேசிய அளவில் மேற்கொள்ளப்படும். போஸ்ட் கார்டு மற்றும் ஆன்லைன் பெட்டிஷன்கள் போன்றவையும் நடத்தப்படும். புதுடெல்லியில் மார்ச் 5ல் “யு.ஏ.பி.ஏ.விற்கு எதிரான மக்கள் மாநாடு” நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிலும் இந்த இயக்கத்தின் கமிட்டிகளை உருவாக்குவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக இந்த இயக்கத்தின் உதவி ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஷாஃபி நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment