
டெல்அவீவ்:இஸ்ரேல் சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஃபலஸ்தீன் கைதிகள் தங்களது போராட்டத்தை முடித்துள்ளனர்.
சிறைக் கைதிகளுக்கும், இஸ்ரேல் சிறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டதாக ஃபலஸ்தீன் சிறைத் துறை அமைச்சர் இஸ்ஸா கராக் அறிவித்துள்ளார்.
அதேவேளையில், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டது குறித்து கூடுதல் விபரங்களை அவர் அளிக்கவில்லை. ஃபலஸ்தீன் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டதை இஸ்ரேல் சிறைத்துறை உறுதிச்செய்துள்ளது.
இஸ்ரேல் சிறைகளில் 2000க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனிகள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைகளில் கைதிகளை சித்திரவதைச் செய்தல், போதிய வசதிகளை வழங்காதது போன்ற காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஃபலஸ்தீன் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். இதில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன.
ஃபலஸ்தீன் கைதிகளுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அது தேசிய பேரிடர் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். எகிப்து அரசு இஸ்ரேல் அதிகாரிகளுடனும், ஃபலஸ்தீன் கைதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment