Sunday, January 15, 2012

வெளிநாடு வாழ் இந்தியர்களை(NRI) பதறவைத்த புரளிச் செய்தி


nri
மும்பை:வெளிநாடுகளில் வசிக்கும்  இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.
ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்நாளிதழில் இதுத்தொடர்பான எச்செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் உலகாளாவிய(worldwide incom) வருமானத்தில் 30 சதவீத வரிவிதிக்கப்படும் தகவலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவிகடந்த வாரம் ஜெய்ப்பூரில் நடந்த பிரவாசி பாரதீய திவஸ்(PMD)யில் வெளியிட்டதாகவும் அந்த புரளிச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக இதுபோன்ற முக்கியமான முடிவுகள், அறிவிப்புகள் பொது நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் அறிவிக்கக் கூடாது. பாராளுமன்றத்தில் அதுவும் நிதிஅமைச்சர் தான் முறையாக அறிவிக்கவேண்டும். முதலீட்டாளர்களுக்கு விரோதப்போக்கான சூழல் இருக்கிறது என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கூற்றால் ஆத்திரமடைந்த ரவி இவ்வாறு கூறியிருக்ககூடும் என்று கூறுகிறார்கள். அந்த விழாவில் ரவியாலும் மற்ற அமைச்சர்களாலும் அவமானப்பட்ட சிலரே வெளிநாடுவாழ் இந்தியர்களை கலங்கடிக்க இவ்வாறு புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
என்.ஆர்.ஐக்களின் சேமிப்பாக கடந்த ஆண்டு 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை இந்தியாவுக்கு வந்துள்ளது. வருமான வரி, முதலீடு தொடர்பான அந்நிய செலாவணி கட்டுப்பாடு, சுங்கம்(கஸ்டம்ஸ்), என்.ஆர்.ஐக்கள் மீதான வரிவிதிப்பு ஆகியவற்றில் சிறு மாற்றம் தேவைப்பட்டால் கூட அதற்கு பல்வேறு முதலீட்டாளர்கள் மத்தியில் பல மாதங்கள் விவாதிக்க வேண்டிவரும். மேலும் வல்லுநர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும். அதுமட்டும் போதாது, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய கேபினட்டின்(மத்திய அமைச்சரவை) அனுமதியையும் பெறவேண்டும். மேலும் விரிவான இந்திய ஜனநாயக நடைமுறையில் சாதாரண நிகழ்ச்சிகளில் பலலட்சம் மக்களை பாதிக்கும் முக்கிய அறிவுப்புக்களை அமைச்சர்களால் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் நடந்தது என்ன?
ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருடாந்திர கூட்டத்தில்(PMD) இந்திய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்.ஆர்.ஐக்கள் மீதான நேரடி வரி(Direct taxcode(DTC)) குறித்த தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளித்தார். சில என்.ஆர்.ஐக்கள் தாங்கள் இந்தியாவில் 60 நாட்கள் தங்கினாலே உலகளாவிய வருமானத்தில் 30 சதவீதம் நேரடி வரி விதிக்கப்படுமா? என்ற கவலையை வெளிப்படுத்தினர்.
தற்போதைய சட்டத்தின் படி நிதியாண்டில் என்.ஆர்.ஐக்கள் இந்தியாவில் 182 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் அவர்களது உலகாளவிய வருமானத்தில் வழக்கமான வருமானவரி விகிதத்தை கட்டவேண்டும்(ஏறத்தாழ 30 சதவீதம்).
நேரடி வரிச்சட்டம்(DTC) குறித்து பிரணாப் குறிப்பிடுகையில், ‘ஒருவரை நாட்டில் வசிப்பவராக(Resident) கருதவேண்டுமென்றால் முன்சென்ற நான்கு ஆண்டுகளில் 365 நாட்கள் அல்லது அதற்கும் மேலாகவோ, இந்த நிதியாண்டில் 60 நாட்கள் இந்தியாவில் தங்கியிருத்தல் வேண்டும். அதாவது இரண்டு காரணிகளும் இணையும் பொழுதே ஒருவர் ரெஸிடெண்ட் ஆக கருதப்படுவார்.’ என கூறினார் முகர்ஜி.
மேலும் என்.ஆர்.ஐ ஒரு நிதியாண்டில் இந்தியாவில் குடியேறி  வசித்திருந்தாலும், அவருடைய உலகளாவிய வருமானத்திற்கு உடனடியாக வரி விதிக்கப்படாது. கடந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள், அல்லது 7 ஆண்டுகளில் 730 நாட்கள் தங்கியிருந்தால் மட்டுமே என்.ஆர்.ஐக்களின் உலகளாவிய வருமானம் வரிவிதிப்பிற்கு உட்படும் என்றார் அவர்.
ஆனால் நேரடி வரி சட்டம்(DTC) குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இச்சட்டம் குறித்த மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது என சுட்டிக்காட்டினார் முகர்ஜி.

No comments:

Post a Comment