
மதுரை:பல்கலை கழகங்கள் மாணவர்களுக்கு அறிவை ஊட்டுவதற்கு பதிலாக அவர்களின் வாழ்க்கையை கற்காலத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜோதிடம் போன்ற மூடத்தனமான குருட்டு நம்பிக்கைகளை பாடத்திட்டத்தில் புகுத்தினால் என்ன ஆகும்? அதுவும் பகுத்தறிவு பகலவன் என போற்றப்படும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இத்தகைய அநாகரிகத்தை பாடத் திட்டமாக அரங்கேற்ற மதுரை காமராசர் பல்கலை கழகத்திற்கு யார் உத்தரவிட்டார்கள்?. மதுரை காமராசர் பல்கலை கழகத்தின் பாடத் திட்டத்திலிருந்து ஜோதிடத்தை நீக்கக்கோரி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுக்குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘ஜோஸ்யம், சோதிடம் என்பது அறிவியல் அல்ல. போலி அறிவியல்(NotScience, but only PSUDO Science) என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆராய்ச்சியாளர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், இந்த நாட்டைச் சேர்ந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அமிர்த்தியாசென், ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் உள்பட அனைவரது ஒருமித்த கருத்து இது.
வானவியல்(Astronomy) என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஜோஸ்யம்(Astrology)என்பது அறிவியலுக்கு மாறானது ஆகும். தந்தை பெரியார் இது ஒரு மூடநம்பிக்கை என்று விளக்கி 1938-லேயே ஜோதிடப் புரட்டு என்ற நூலை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பி உள்ளார்.
தந்தை பெரியார் கருத்துக்கு நேர் எதிர்மாறான கொள்கை கொண்ட ராஜாஜி கூட, ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை, தனக்கு அதில் ஈடுபாடு கிடையாது என்று கூறி எழுதியுள்ளார். அவரது சீடர் கல்கியும் கூட அதே கருத்தை கொண்டுள்ளார்.
அதுபோல பிரபல நாத்திக விஞ்ஞானியான, மனோதத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆப்ரகாம் கோவூர் இது குறித்து பல்வேறு மறுக்க முடியாத ஆதாரங்களை அவரது கட்டுரைகளில் விவரித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டு அறிஞர் வால்டேர் 32-வது வயது வரை தான் உயிர் வாழ்வார் என்றனர் ஜோதிடர். ஆனால் வால்டேர் 84 வயதுவரை வாழ்ந்தார். ஜோதிடம் உண்மையல்ல என்பதற்கு இதற்கு மேல் என்னகூற வேண்டும்?
நாம் வாழும் இந்த 21-ஆம் நூற்றாண்டு அறிவியல் உச்சத்தை எட்டிய நூற்றாண்டு, மனிதன் செவ்வாயில் குடியேறலாம் அங்கே மீத்தேன் வாயு, நீராவி உண்டு என்பதால் உயிரினம் வாழும் நிலை – அனுமானம் உண்டு என்று வானவியலாளர்கள், விண்வெளி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அறிவியலைச் சொல்லிக் கொடுத்து, மாணவர்களை, இளைஞர்களை அறியாமை இருளில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டிய பல்கலைக் கழகங்கள், பழைய, பாஜக காவி ஆட்சியில் கல்வியைக் காவி மயமாக்கும் திட்டத்தில் கொண்டுவந்த ஜோதிடத்தை மாணவர்களுக்குப் பாடமாக்கிப் பட்டயம், பட்டம் தருவோம் என்பது மிகவும் கொடுமையானது, கேவலமானது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இதனைக் கொண்டுவரவிருக்கும் முடிவை துணைவேந்தர் இல்லாத (தலை இல்லாத)ஒரு தற்காலிக ஆளுமைக்குழு முடிவு எடுத்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.
எனவே இதனைக் கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் ஜனவரி 21-ம் தேதி சனிக்கிழமை மதுரையின் முக்கிய இடத்தில் நடத்த உள்ளனர்’ என்று அந்த அறிக்கையி்ல் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment