Thursday, January 12, 2012

பாகிஸ்தான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: கிலானி கடும் கண்டனம்

பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்ப்பதையும், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்தது.
அதோடு பாகிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் கான்ட்ராக்டர்கள் 335 பேர் வெளியேற வேண்டும் எனவும் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவர் சுஜா பாஷா அமெரிக்கா சென்று சி.ஐ.ஏ அதிகாரிகளிடம் கடந்த திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். உளவுத் தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா, ட்ரோன் தாக்குதலை நிறுத்தும் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் பலியாயினர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, தீவிரவாத்துக்கு எதிராக பாகிஸ்தான் போராடி வருகிறது. பழங்குடியின பகுதியில் தீவிரவாதிகளையும், அப்பாவி மக்களையும் நாங்கள் பிரித்து வைத்துள்ளோம். ஆனால் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் இவர்களை மீண்டும் இணைத்து விடுகிறது.
மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த போரும் வெற்றி பெற முடியாது. அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் உள்நாட்டில் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தீவிரவாதம், சட்ட ஒழுங்கு, பொருளாதாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
ஒரு மனித குண்டு வெடித்தால் கூட அது அன்னிய முதலீட்டாளர்களை பீதியடையச் செய்யும். எனவே ட்ரோன் தாக்குதலை அமெரிக்க நிறுத்த வேண்டும். இவ்வாறு கிலானி கூறினார்.  

No comments:

Post a Comment