
திருச்சூர்(கேரளா):ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது கேரள மாநிலம் திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
வி.என்.நாராயணன் என்பவர் தொடுத்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் 1986-ம் ஆண்டில் ‘எக்ஸ்பிரஸ் மலையாளம் பிரைவேட் லிமிடெட்’ என்ற நாளேடு நிறுவனத்தில் ரூ 10 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் தலைவராக சுப்பிரமணியன் சுவாமியே இருந்துள்ளார்.
3 வருட காலத்துக்கு போடப்பட்ட அந்த முதலீடு, முதிர்வுக் காலத்துக்குப் பின்னும் திருப்பித் தரப்படவில்லை. சில வருடங்களுக்குப் பின் நிறுவனமும் செயல்படவில்லை. இது குறித்து நாராயணன் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், 9 சதவீத வட்டியுடன் முதலீட்டுத் தொகையைத் திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனால் சுவாமி அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தெரிகிறது.
இதனால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் அடிப்படையில், பிரிவு 27-ன் கீழ் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக சுவாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பத்மினி சதீஷ், குற்றத்தை உறுதி செய்து ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்டை சுவாமி மீது பிறப்பித்தார்.
2012 ஏப்ரல் 2-ம் தேதிக்குள் சுவாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி டெல்லி போலீசாருக்கும் அவர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment