Saturday, December 10, 2011

சர்தாரிக்கு பக்கவாதம்:பிலாவலுக்கு கூடுதல் பொறுப்பு


இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு பக்கவாத நோய் தாக்கியுள்ளதை தொடர்ந்து மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
தற்பொழுது துபாய் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரை உயர் சிகிட்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்லப்போவதாக பாகிஸ்தான் நாளிதழ் நியூஸ் டைலி கூறுகிறது.
மாரடைப்பை தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் துபாய் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சர்தாரி மேலும் ஒரு வாரம் சிகிட்சை பெறுவார். அவருக்கு உடலின் ஒரு பகுதி தளர்ந்து விட்டதால் பேசும் சக்தி பாதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மூளையில் இரத்தகசிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருடைய உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவர்கள் அபாய கட்டத்தை அவர் தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப அவருக்கு உயர்சிகிட்சை தேவைப்படுவதால் அவரை பிரிட்டனுக்கு சிகிட்சைக்காக கொண்டு செல்லப்போவதாக உயர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி நியூஸ் டைலி கூறுகிறது.
அதேவேளையில், பாகிஸ்தான் ஆளுங்கட்சியான பாக்.பீப்பிள்ஸ் பார்டி(பி.பி.பி)யின் முழு பொறுப்பும் சர்தாரியின் மகன் பிலாவலிடம்
ஒப்படைக்கப்படும் என கல்ஃப் நியூஸ் கூறுகிறது.

No comments:

Post a Comment