Wednesday, February 26, 2014

சிறப்பாக நடந்தேறிய பெண்கள் அறிவகம் புதிய கட்டட திறப்பு விழா!

Arivagam
நெல்லை: கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஞாயிறன்று நெல்லை ஏர்வாடியில் பெண்கள் அறிவகத்தின் புதிய கட்டட திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.
திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி முஃப்தி ஏ. ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி அவர்களின் பிரார்த்தனையுடன் காலை 10 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
அறிவகத்தின் புதிய கட்டடத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் திறப்பு விழா நிகழ்ச்சிகள் துவங்கின. ஆரம்பமாக,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் ஷேக் அன்சாரீ அவர்கள் இறைமறை வசனங்களை ஓதினார். தமிழ்நாடு டெவலப்மெண்ட் அறக்கட்டளையின் உறுப்பினர் அஸ்கர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் அவர்கள் விழாவுக்குத் தலைமை தாங்கி, தலைமையுரை ஆற்றினார்.
பின்னர் சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் தேசியத் தலைவர் கே.எம். ஷரீஃப் அவர்கள், “படைப்புகளிலேயே சிறந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். மற்ற படைப்புகளுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் அறிவு வளர்ச்சி. மனிதன் தன் அறிவில் வளர்ச்சியடைந்து வருகிறான். அந்த அறிவைப் பயன்படுத்தி புனித இஸ்லாத்தின் பால் மக்களை அழைப்பது அனைவரின் கடமையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மௌலவி முஃப்தி ஏ. ரூஹுல் ஹக் ரஷாதி காஸிமி அவர்கள் சிறப்புரையாற்றினார். “அறிவகம் என்பது மிக முக்கியமான காலத்தின் தேவை. இந்த அறிவகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக வேண்டும்” என்று அவர் சிறப்புரையில் தனது அவாவை வெளியிட்டார்.
விழாவுக்கு முன்னிலை வகித்த சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) மாநிலத் தலைவரும், பெண்கள் அறிவகத்தின் முன்னாள் முதல்வருமான மௌலவி கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாக்கவி அவர்கள் தனது உரையில் கூறியதாவது:
“ஏர்வாடி என்ற ஊருக்கே பெருமை சேர்த்துத் தந்தது இந்த அறிவகம்தான். ஏர்வாடி என்றால் எல்லோரும் கீழக்கரைக்கு அருகில் உள்ள தர்ஹா இருக்கும் ஏர்வாடியைத்தான் எண்ணுவார்கள். ஆனால் இன்று பெண்கள் அறிவகம் என்றாலே அனைவருக்கும் அது நெல்லை ஏர்வாடி என்று தெரிகிறது. காயல்பட்டணத்தில் உள்ள தஃவா சென்டருக்கு அந்த ஊர் மக்கள் இயக்க பாகுபாடுகளின்றி முழு ஆதரவு தருகிறார்கள். அதேபோன்று ஏர்வாடிவாசிகள் அறிவகத்தை தங்கள் சொந்த மதரசாவாக எண்ண வேண்டும். அதற்கு இயக்க பாகுபாடுகளை மறந்து அனைத்து வகைகளிலும் முழு ஆதரவைத் தர வேண்டும்.” இவ்வாறு தெஹ்லான் பாக்கவி அவர்கள் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இஸ்லாத்தை இதயத்தினுள் ஏந்தி, தங்கள் வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்ட இரண்டு சகோதரிகள் உரையாற்றியது விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது. தாங்கள் ஏன் இஸ்லாத்திற்கு வந்தோம் என்பதை அவர்கள் உருக்கமாக எடுத்துக் கூறினார்கள்.
இன்னும் பல ஜமாஅத் தலைவர்களும், மார்க்க அறிஞர்களும், சமுதாயத் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக, பெண்கள் அறிவகம் முதல்வர் மௌலவி ஜஅஃபர் இமாம் அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹைதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
பல சிரமங்கள் பட்டு அறிவகம் அடைந்த வளர்ச்சி, கிராமாங்கள்தோறும் அறிவகம் செய்து வரும் அல்லாஹ்வின்பால் அழைக்கும் புனிதப் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி கலந்துகொண்டவர்களைக் கவர்ந்தது.
ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் விழாவில் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் அறக்கட்டளையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment