Wednesday, January 29, 2014

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்கும் கட்சியுடன் கூட்டணி: பி.ஜெயினுலாபிதீன்

சென்னை: முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகத்தின்
முக்கிய நகரங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் சிறை செல்லும் போராட்டம் நடத்தினர்.
முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய, மாநில  அரசுகள் உரிய ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ததஜ சார்பில் தமிழகமெங்கும் சிறை செல்லும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை, திருச்சி, கோவை, நெல்லை மற்றும் புதுச்சேரி  ஆகிய இடங்களில் சிறை செல்லும் போராட்டம்  நடைபெற்றது. சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென அப்போது  முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசு அலுவலகங்களில் விகிதாச்சாரப்படி முஸ்லிம்களுக்கு வேலை கிடைக்கவில்லை.  நாடு சுதந்திரத்திற்காக பாடுபட்ட இஸ்லாமியர்களை இந்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. வெறும் 30 ஆயிரம் என்ற வகையில் முஸ்லிம்கள் பணியில்  இருக்கிறார்கள். முறையான ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ரங்கநாத் மிஸ்ரா, ராஜேந்திர சச்சார் கமிஷன் ஆகியவை, இஸ்லாமியர்கள்  இந்தியாவில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வாதாரம் உயர ஒதுக்கீடு கொடுத்தாக வேண்டுமென ஆதாரத்துடன் பரிந்துரை செய்தும் அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீடு தரும் கட்சிக்கே முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என போராட்டத்தில் உரையாற்றியோர் தெரிவித்தனர்.
சென்னையில் இப்போராட்டத்தில் பங்கேற்ற ததஜ தலைவர் பி.ஜெயினுலாபிதீன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக வாக்குறுதி அளிக்கும் கூட்டணிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்போம்" என்றார்.
இப்போராட்டம் காரணமாக போராட்டம் நடைபெற்ற நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்றது. இதில் மாநில செயலர் ஆவடி இப்ராஹீம் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில இருந்தும் முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் என  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment