நய்பிடோ: மேற்கு மியான்மரில் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேரை கூட்டுப் படுகொலை செய்ததாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டுப் படுகொலை நிகழ்ந்த இடத்திற்கு சென்று சாட்சிகளிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் பலியானவர்களின் எண்ணிக்கையை மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இதனை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃபோர்டிஃபை ரைட்ஸ் என்ற மனித உரிமை அமைப்பு கூட்டுப் படுகொலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. 2012 அக்டோபர் மாதத்திற்கு பிறகு மேற்கு மியான்மரில் நடக்கும் மிக பயங்கரமான தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் புத்த தீவிரவாதிகள் இங்கு முஸ்லிம்கள் மீது கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர். மவுங்தோ டவுன்ஷிப்பில் ரோஹிங்கியா கிராமவாசிகளுக்கும், போலீசுக்கும் இடையே கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் கூட்டுப் படுகொலை நிகழ்ந்துள்ளது.
உள் பிரதேசமான இங்கு ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
போலீஸ் தாக்கப்பட்டதாக கூறும் மாநில, தேசிய அரசு செய்தித் தொடர்பாளர்கள், கூட்டுப் படுகொலை தொடர்பான செய்திகளை மறுத்தனர். இது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க, பிரிட்டீஷ் தூதரகங்களும், ஐ.நா.வும் வலியுறுத்தின.
ஜனவரி 13-ஆம் தேதி எட்டுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியாவாசிகள் போலீசுடன் மோதியதாக ரோஹிங்கியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரியும், மூன்று ரோஹிங்கியா முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் கிராமத்தைச் சுற்றி வளைத்து புத்த தீவிரவாதிகளுடன் இணைந்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.
70க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாவாசிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பலரைக் காணவில்லை.
போலீஸ் கூட்டாக கைது செய்வதாக ஃபோர்டி ஃபை ரைட்ஸ் கூறுகிறது. இச்சம்பவம் உறுதி செய்யப்பட்டால் 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 277 ஆக உயரும். 1,40,000 பேர் இங்கு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment