
புனே: தொழில் அதிபரான ராஜ்குமார் தூத், சிவசேனா கட்சி சார்பில்
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு எம்.பி ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
புனே, முகுந்தவாடி காவல்நிலையத்தில் ஒரு பெண், தன்னை ராஜ்குமார் வன்புணர்ந்ததாக புகார் கொடுத்தார். அப்புகார் மனுவில், "2 குழந்தைகளுக்குத் தாயான தன் வீட்டிற்குள் அதிரடியாக ராஜ்குமார் புகுந்து தன்னை வன்புணர முயற்சித்ததாகவும், எதிர்த்து போராடிய தன்னை, தாக்கி மானபங்கம் செய்ததாகவும்" குறிப்பிட்டு இருந்தார். மேலும், இச்சம்பவத்தை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்றும் புகாரில் தெரிவித்து இருந்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட முகுந்தவாடி காவல்துறை ஆய்வாளர் சாக்ரே, வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டார். எனவே, புகார் கொடுத்த பெண் புனே நீதிமன்றத்தில், ராஜ்குமார் தூத் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை விசாரித்த நீதிபதி, ராஜ்குமார் தூத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவலர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காவல்துறை ஆய்வாளர் சாக்ரே, "எம்.பி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைய ஆரம்பித்து இருக்கிறோம். எனினும் புகாருக்கு ஆதாரம் இல்லாமல் ராஜ்குமாரை கைது செய்ய இயலாது" என்று கூறியுள்ளார்.
இப்புகார் உண்மை என்று தெரிய வந்தால், வழக்கு பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment