Wednesday, January 25, 2012

துருக்கிக்கு எதிரான மசோதா பிரான்சு செனட்டில் நிறைவேற்றம்


துருக்கிக்கு எதிரான மசோதா பிரான்சு செனட்டில் நிறைவேற்றம்
பாரிஸ்/அங்காரா:முதல் உலகப்போர் தொடர்பாக துருக்கிக்கு எதிரான மசோதாவை பிரான்சு பாராளுமன்ற செனட் நிறைவேற்றியது. ஆர்மீனியா குடிமக்களை துருக்கி ராணுவம் இனப்படுகொலை செய்ததாகவும், இதனை மறுப்பவர்களுக்கு சிறைத்தண்டனை உறுதிச்செய்யும் மசோதா பிரான்சு பாராளுமன்றமான செனட்டில் 86 வாக்குகள் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை ஆதரித்து 127 வாக்குகள் பதிவாகின. அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியின் யு.எம்.பி கட்சி இம்மசோதாவை கொண்டுவந்தது.
அதிபர் கையெழுத்திட்டவுடன் இம்மசோதா அமுலுக்கு வரும். ஏற்கனவே பாராளுமன்ற கீழ் சபை இம்மசோதாவை நிறைவேற்றியது. பின்னர் துருக்கி பிரான்சுடன் ராணுவ-பொருளாதார உறவை துண்டித்தது. இந்நிலையில் இம்மசோதா செனட்டில் நிறைவேறியுள்ளது. அரசியல் சாசனம் வழங்கும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என சுட்டிக்காட்டி செனட்டின் சட்டக் கமிஷன் இம்மசோதாவை நிராகரித்தது.
இனத் துவேசமான, பாரபட்சமான மசோதாவை பிரான்சு செனட் நிறைவேற்றியுள்ளது என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் சிந்தனைக்கு விலங்கிடும் பிரான்சு அரசின் தீர்மானம் கருத்து சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என எர்துகான் துருக்கி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இப்புதிய சூழலில் பிரான்சுடன் தூதரக உறவை துருக்கி குறைத்துக்கொள்ளும் என பிரான்சில் துருக்கி தூதர் தாஷின் பர்குஓக்லு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரண்டு நேட்டோ நாடுகள் இடையேயான உறவை சீர்குலைக்கவே இச்சட்டம் உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மசோதா அநீதமானது. துருக்கியின் மரியாதையை குறைக்கும் நடவடிக்கை என துருக்கியின் சட்ட அமைச்சர் ஸாதுல்லாஹ் அர்ஜின் குற்றம் சாட்டியுள்ளார்.
அர்மீனிய மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பிரான்சு செனட்டின் தீர்மானம் இரு நாடுகளின் மக்களிடையே நல்லிணைக்கத்தை அதிகரிக்கும் என ஆர்மினிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1915-16 காலக்கட்டத்தில் 15 லட்சம் ஆர்மீனிய மக்கள் கொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இனப்படுகொலை என பிரான்சு முன்னர் அறிவித்தது. இதனை மறுப்பவர்களுக்கு ஓர் ஆண்டு சிறையும், 57 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படும் என புதிய சட்டம் கூறுகிறது.
பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் ஆர்மீனிய வம்சாவழியைச் சார்ந்தவர்களின் வாக்குகளை குறிவைத்து சர்கோஸி இம்மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்‌ஷம்பர்க் ஆகிய நாடுகளில் துருக்கி நாட்டு மக்கள் இம்மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment