
இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் ஸப்காதர் நகரத்திற்கு அருகே வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் ரிப்போர்ட்டர் முகர்ரம் கான் ஆதிஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஸப்காதர் நகரத்தில் ஒரு மஸ்ஜிதுக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பைக்கில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் மஸ்ஜிதில் நுழைந்து முகர்ரமின் தலையிலும், நெஞ்சிலும் துப்பாக்கியால் சுட்ட பிறகு தப்பி விட்டனர். கடுமையாக காயமுற்ற முகர்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பு மரணமடைந்தார்.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் பஷ்து மொழி ரேடியோவில் பணியாற்றி வந்தார் முகர்ரம். இவர் ப்ரஸ் க்ளப் தலைவராகவும், துன்யா நியூஸ் சேனலிலும் பணியாற்றினார்.
இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது. வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா பணியாளர்களுக்கு தாலிபானின் மிரட்டல் இருந்ததாக கூறப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 10 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment