
டெல்அவீவ்:மாறிவரும் உலக சூழலில் இஸ்ரேலுடன் ஏன் பாகிஸ்தான் உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், அமெரிக்காவின் கைப்பாவையுமான ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக எப்பொழுதும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் இஸ்ரேலுடன் மிகச்சிறந்த உறவை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் விருப்பங்களுக்கு உறுதுணையாக அமையும் என முஷாரப்ஃ கூறியுள்ளார்.
இஸ்ரேல் பத்திரிகையான ஹாரட்ஸிற்கு அளித்த பேட்டியில் முஷாரஃப் இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களின் பொதுவான உணர்வை புறக்கணித்து இஸ்ரேல் பிரதமராக இருந்த ஏரியல் ஷெரானுடன் பாகிஸ்தான் அதிபராக இருந்த தான் அமெரிக்காவில் வைத்து கைக் குலுக்கியதையும், வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கஸூரியை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பிற்கு அனுப்பியதையும் சுட்டிக்காட்டிய முஷாரஃப், இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவதில் தனக்கு உண்மையான உணர்வு இருந்தது என கூறியுள்ளார்.
‘ஃபலஸ்தீன் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்காக பாகிஸ்தானிகள் எக்காலத்திலும் இஸ்ரேல் எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்துள்ளனர். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட 1948-ஆம் ஆண்டு முதல் நிலைமை அதுதான். ஆனால், 1948-ஆம் ஆண்டின் சூழல் இன்று இல்லை. கொள்கைகள் சூழலுக்கு ஏற்றவாறு மாறவேண்டும். இதுதான் எனது நிலைப்பாடு’ என முஷாரஃப் கூறுகிறார்.
அதேவேளையில், ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவை பாகிஸ்தான் தொடரவேண்டும் என சுட்டிக்காட்டிய முஷாரஃப், இஸ்ரேல் ஒரு எதார்த்தம் என்பதை அடையாளம் கண்ட பல்வேறு முஸ்லிம் நாடுகள் அந்நாட்டுடன் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் உறவை ஏற்படுத்தி இருப்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment