Thursday, December 5, 2013

பா.ஜ.க நிர்வாகிகள் கொலையில் எதுதான் உண்மை?: கருணாநிதி!

சென்னை: "ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடியில், பா.ஜ.க. நகர பொதுச் செயலாளரான க.முருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு பேரை கைது செய்த காவல்துறை,
தற்போது இதில் போலிஸ் பகுருதீனுக்கும் ,பிலால் மாலிக்கிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது முரண்பட்டதாக உள்ளது" என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கேள்வி:– முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்திற்கு அளித்த பதிலில் ஏற்காடு தேர்தல் பிரசாரத்தின் போது, தான் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை, புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்றெல்லாம் தெரிவித்திருக்கிறாரே?
பதில்:– நவம்பர் 28–ந்தேதி, ஏற்காடு தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது பேசிய பேச்சு தமிழக நாளேடுகளில் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்று தேர்தல் கமிஷனுக்கு எழுதியிருக்கிறார். தேர்தல் கமிஷனுக்கு முதல்–அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் உண்மைக்கு மாறான தகவலை கடிதம் மூலமாக தெரிவிப்பதே பெரிய தவறாகும்.
ஏற்காடு தொகுதி மக்களுக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக உறுதி அளித்து பேசிவிட்டு தற்போது வாக்குறுதியே அளிக்கவில்லை என்று ஜெயலலிதா மறுத்திருப்பது ‘‘முழுப்பூசணிக்காயை இலைச்சோற்றிலே மறைக்க’’ முயற்சிக்கின்ற காரியம் மட்டுமல்லாமல்; ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தபடி, ‘‘தேர்தல் விதிகளை மீறிய குற்றமும்’’ ஆகும்.
கேள்வி:– போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை டிசம்பர் 16–ந்தேதி வரை காவலில் வைக்க ராமநாதபுரம் இரண்டாவது குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறாரே?
பதில்:– ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடியில், பா.ஜ.க. நகர பொதுச் செயலாளரான க.முருகன் நகைக்கடை பஜாரில் ஒரு கும்பலால் 2013–ம் ஆண்டு மார்ச் 19–ந்தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த மாவட்டக் காவல் துறையினர், அதே ஆண்டு ஏப்ரல் 6–ந்தேதி நான்கு பேரை கைது செய்தார்கள்.
ஆனால் தற்போது அக்டோபர் 4–ந்தேதி கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனும், பிலால் மாலிக்குக்கும் முருகனை கொலை செய்தது தாங்கள்தான் என்று ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள்.
ஆனால்  (2–12–2013) அன்று ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி போலீசார் கொடுமைப்படுத்தினார்களா என்று இவர்களிடம் கேட்டபோது, ‘‘விசாரணையில் போலீசார் கொடுமைப்படுத்தவில்லை, உணவு முறையாக வழங்கினார்கள், ஆனால் வெற்றுப்பேப்பரில் சில புகைப்படங்களை ஒட்டி மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள். செய்யாத குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொள்ள சொல்லி மிரட்டினார்கள். தனிமைச்சிறையில் அடைக்க வேண்டாம். எங்களுக்கு பயமாக இருக்கிறது’’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
இதற்கு பிறகுதான் நீதிபதி டிசம்பர் 16 வரை இவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறார். காவல் துறையினர் சொல்வதற்கும், பக்ருதீன் கூறுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன; எதுதான் உண்மை?
கேள்வி:– அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ராஜேந்திர பாலாஜி, 8 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருக்கிறார் என்றும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே?
பதில்:– குறிப்பிட்ட இந்த அமைச்சரை பொறுத்தவரை, மதுரை தல்லா குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டபோது, தனக்கு 18.88 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 19.11 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவிலே தெரிவித்திருக்கிறார்.
அமைச்சரான பிறகு, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய்க்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாகவும், அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் என்றும் இதைப்பற்றி ராஜா என்பவர், லஞ்ச ஊழல் போலீசில் புகார் தந்ததாகவும், ஆனால் அங்கே அது விசாரிக்கப்படாததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாகவும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், வழக்கு அப்போது முடிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு திருத்தங்கல் பகுதியில் 2012 டிசம்பர் 11–ந்தேதி 23.35 லட்சம் ரூபாய்க்கு இரண்டு வீட்டுமனையும், இந்த ஆண்டு ஏப்ரல் 20–ந்தேதி 4.23 லட்சம் ரூபாய்க்கு 75 சென்ட் நிலமும் வாங்கியிருக்கிறார்.
இந்த சொத்தின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம். அமைச்சரான பிறகு எட்டு கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கியிருக்கிறார். இந்த சொத்துக்களை வாங்குவதற்கு அரசிடம் முன் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல் கேட்டு, தலைமைச்செயலாளருக்கு மனு அனுப்பியதாகவும், அதற்கு தகவல் அளிக்கவில்லை, எனவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவிலே கோரியிருக்கிறார்.
இந்த மனுவினை நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்து, மனுவுக்கு பதில் அளிக்க தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மற்றும் பொதுத்துறை செயலாளர் ஆகியோருக்கு ‘‘நோட்டீஸ்’’ அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்கள்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்

No comments:

Post a Comment