Monday, November 18, 2013

டெல்லி: வாக்குறுதிகளுக்கு குறைவில்லை: சேரி மக்களின் துயர வாழ்விற்கும் விடியல் இல்லை!

slumarea
புதுடெல்லி: தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளுடன் வாக்காளர்களை தேடி வரும் வேளையில் கிழக்கு டெல்லியில் உள்ள காஸிபூர் கிராம மக்களுக்கு பிரச்சனைகளின் நீண்ட பட்டியல் உள்ளது. கடந்த திங்கள் கிழமை இங்கு 180 குடிசைகள் எரிந்து சாம்பலானது. எலக்ட்ரிக் லைன்கள் மற்றும் மீட்டர்களில் ஏற்படும் தகராறு காரணமாக இவ்வாண்டு எட்டாவது தடவையாக சேரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சார்ந்த ஷேக் ஹஸ்னூர் கூறுகிறார்.
தலைக்கு மேலே கூரையில்லை. குளிர்காலம் துவங்கிவிட்டதால் சேரி மக்களின் வாழ்வு துயரமாக மாறியுள்ளது. குளிர் காற்றை எதிர்கொள்ள இந்த ப்ளாஸ்டிக் ஷீட்டால் முடியாது.
அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் மட்டும் போதும்.’வாக்குறுதிகள் தொடருகிறதே தவிர எங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை’ என்று தனது அடையாள அட்டையை காட்டி விட்டு ஷேக் ஹஸ்னூர் தெரிவித்தார்.
இரண்டு வாரத்திற்குள் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளும், அவர்களுடைய பிரதிநிதிகளும்  தொகுதியில் அவர்கள் ஆற்றிய வளர்ச்சிப் பணிகளின் வண்ணக் கதைகளுடன் பிரச்சாரத்த்ல் ஈடுபட்டுள்ளனர். சேரி வாசிகளுக்கு தாங்கள் அமல்படுத்திய திட்டங்களின் அளவு குறித்து டெல்லி அரசும் கதைகளை அள்ளி வீசுகிறது.
டெல்லி நகர ஷெல்ட இம்ப்ரூவ்மெண்ட் போர்டின் புள்ளிவிபரப்படி 700 சேரிகள்மற்றும் அதிகாரப்பூர்வமற்ற 1218 காலனிகளிலும் 1.4 கோடிமக்கள் வசிக்கின்றனர். வாக்குகளை தேடி மட்டுமே இங்கு அரசியல் தலைவர்கள் வருகின்றனர். வடமேற்கு டெல்லியில் கிராய் சுலைமான் நகரில் 90 சதவீத மக்களும் சேரி வாசிகள் ஆவர். இதில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.
பா.ஜ.கவின் அனில் ஜா, ஆம் ஆத்மி கட்சியின் ராஜன் பிரகாஷ், காங்கிரஸின் அமித் மாலிக் ஆகியோர் இடையே இத்தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. சேரி வாழ் மக்களை கவருவதற்கான அனைத்து தந்திரங்களையும் அரசியல் கட்சிகள் இங்கு மேற்கொண்டு வருகின்றன.
இதைப்போலவே தென்மேற்கு டெல்லியில் ஆர்.கே புரத்தில் 70 -75 சதவீதம் சேரி வாழ் மக்கள் உள்ளனர். வடகிழக்கில் நான்கு தொகுதிகளிலும் சேரி வாழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சீமா புரி, கோகுல் புரி, முஸ்தஃபாபாத், கராவல்நகர் ஆகியனவாகும். சேரி வாழ் மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் தற்போதைய காங்கிரஸ் அரசு பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. ஜெ.என்.என்.யு.ஆர்.எம் திட்டத்தின் படி டெல்லியில் சேரி வாழ் மக்களுக்காக 68 ஆயிரம் வீடுகளும், வறுமையில் உழலும் மக்களுக்காக 15 ஆயிரம் ஃப்ளாட்டுகளும் கட்டப்படுகின்றன. வீட்டின் தொகையில் 65 ஆயிரம் ரூபாயை பயனீட்டாளர்கள் 15 ஆண்டுகளில் கட்டி முடிக்கவேண்டும். ஆனால், இத்திட்டத்தில் 1998-ஆம் ஆண்டிற்கு முன்பு டெல்லிக்கு வந்தவர்களை  மட்டுமே முதலில் உட்படுத்தியுள்ளனர். இதனால் 85 சதவீத சேரி வாழ் மக்களுக்கும் வீடு கிடைக்காது. இதனைத்தொடர்ந்து சமூக அமைப்புகள் நடத்தியவலுவான போராட்டத்தை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என அண்மையில் திருத்தப்பட்டது.
நரேலா, பவானா, துவாரகா ஆகிய பகுதிகள் ஃப்ளாட்டுகள் தயாராகிவிட்டன.ஆனால், ரியல் மாஃபியாக்களின் தலையீடு, ஊழல்,அடிப்படை வசதிகளில் குறைப்பாடு,பயனீட்டாளர்களிடம் உரிய அடையாள அட்டைகள் இல்லாமை ஆகிய காரணங்களால்ஃப்ளாட்டுகள் இதுவரை தேவையுடையோரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

No comments:

Post a Comment