Sunday, November 17, 2013

பயங்கர வெடிபொருட்களுடன் இரு பயங்கரவாதிகள் கைது!

மதுரை: ஜெலட்டின், டெட்டனேட்டர்கள் போன்ற பயங்கர
வெடிபொருட்களுடன் இரு பயங்கரவாதிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வஞ்சிநகரத்தை அடுத்த பொட்டப்பட்டி பகுதியில் சிலர் பயங்கர வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கொட்டாம்பட்டி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரைப்பிடித்து விசாரித்தனர்.
அவர்களைச் சோதனை செய்தபோது, அவர்களிடம் எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் 144, ஜெலட்டின் குச்சிகள் 44, வெடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் 20 கிலோ, இரும்பு கம்பிகள் மற்றும் பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்த ராஜா மற்றும் மேலூர் கச்சிராயன்பட்டி மூர்த்தி ஆகியோர் என்பது தெரிய வந்தது. அந்த வெடிப்பொருட்களை எதற்காக, எங்கு எடுத்துச் செல்கின்றனர் என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
அவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறை, வெடிபொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் வைத்திருந்த வெடிபொருட்கள் அனைத்தும் பயங்கர சக்தி வாய்ந்தவை என்பதால், எங்கேனும் பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்காக அவற்றை எடுத்துச் சென்றனரா அல்லது ஏதேனும் பயங்கரவாத இயக்கத்துக்கு சப்ளை செய்ய கொண்டு சென்றனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இது காவி பயங்கரவாதிகளுக்கு அனுப்ப படுகிறதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment