பக்கங்கள்

Tuesday, July 2, 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:முதல் தகவல் அறிக்கையில் ஐ.பி சிறப்பு இயக்குநரின் பெயர் இடம் பெறாது!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த தற்போதைய இண்டலிஜன்ஸ் பீரோவின்(ஐ.பி) சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமாரின் பெயர் ஜூலை 4-ஆம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறாது.
வருகிற 4–ந் தேதி இந்த வழக்கில் முதலாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய இருப்பதாக, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று குஜராத் ஐகோர்ட்டில் வாக்குறுதி
அளித்து இருப்பதாகவும், அந்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில், திட்டமிட்டபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த குற்றப்பத்திரிகையில், ‘போலி என்கவுண்டர்’ நடத்திய அதிகாரிகள் யார்? யார்? நேரடி தொடர்பு உடைய அதிகாரிகள் யார்? யார்? என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், போலி ‘என்கவுண்டர்’ நடத்த சதித்திட்டம் தீட்டியவர்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை என்றும், சதி பற்றி விசாரணை நடத்த மேலும் அவகாசம் கேட்கப்படும் என்றும், பின்னர் அந்த சதி பற்றி கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்படும் என்றும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலி என்கவுண்டர் சம்பவம் நடைபெற்ற 2004-ஆம் ஆண்டு ஐ.பியின் துணை இயக்குநராக இருந்தவர் ராஜேந்தர் குமார். இஷ்ரத் உள்ளிட்ட நான்குபேரையும் முன்னரே கடத்தி வந்து கஸ்டடியில் வைத்துவிட்டு சம்பவம் நடந்த தினத்தில் குஜராத் போலீசிடம் ஐ.பி ஒப்படைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.போலி என்கவுண்டர் படுகொலைகளுக்கு பிறகு ஏ.கே-47 உள்ளிட்ட ஆயுதங்களை அளித்ததும் ராஜேந்தர் குமார் தான் என்பதுக் குறித்த ஆதாரமும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.ஐ.பியின் புகாரின் அடிப்படையில் ராஜேந்தர் குமாருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை வழங்கிய முன்னாள் எஸ்.ஐ.டி உறுப்பினர் சதீஷ்வர்மாவை சி.பி.ஐயின் விசாரணைக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது ஐ.பியின் சிறப்பு இயக்குநராக பதவி வகிக்கும் ராஜேந்தர் குமார், அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்.அதற்கு பிறகு அவரை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பது குறித்த நடவடிக்கைகள் துவங்கும் என கருதப்படுகிறது.ராஜேந்தர் குமாரை கைதுச் செய்தால், அதன் மூலம் இந்த போலி என்கவுண்டர் படுகொலை வழக்கின் விசாரணை குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி மற்றும் அவரது சகா அமித் ஷா ஆகியோரை நோக்கி திரும்பும் என்பதால் சி.பி.ஐக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது.மோடி மற்றும் அமித் ஷாவின் அனுமதியோடு போலி என்கவுண்டர் நடத்தி இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேர் அநியாயமாக படுகொலைச் செய்யப்பட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ வசம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment