கெய்ரோ : எகிப்து அதிபர் முர்ஸியின் அரசு ராணுவத்தால் கலைக்கப்பட்டு விட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டிக்க மறுத்ததன் மூலம் மறைமுகமாக எகிப்து ராணுவத்துக்கு பல்வேறு உலக நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.
எகிப்து நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் எகிப்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டு முழுமையான ஜனநாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. எகிப்து மக்கள் சுதந்திரமாக தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ராணுவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரான்சு கூறியுள்ளது.
முக்கிய அரபு நாடுகளான சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் எகிப்தில் நடந்த மாற்றத்தை வரவேற்பதாக எகிப்து ராணுவத்துக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளன. முஸ்லீம் சகோதரத்துவத்தின் நட்பு நாடான கத்தர் இது வரை எக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
சிரியாவில் மக்கள் புரட்சியை சந்தித்து வரும் சிரிய அதிபர் பஷர் எகிப்து மக்களின் புரட்சியை பாராட்டுவதாகவும் மதத்தை அரசியல் காரணங்களுக்கு பயன்படுத்துபவர்களின் நிலை இப்படி தான் முடியும் என்றும் கூறினார். மேலும் முஸ்லீம் சகோதரத்துவத்தின் சித்தாந்தமான இஸ்லாமிய அரசியல் தோற்று போய் விட்டது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ராணுவம் கவிழ்ப்பது கவலைக்குரியது என்று கவலை தெரிவித்திருக்கும் அதே வேளையில் ராணுவத்தை கண்டிக்கவோ எகிப்தில் நடந்தது ராணுவ புரட்சி என்று கூறவோ முன்வராதது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment