மும்பை:கம்யூனிச கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு அதனை கடைப்பிடிக்கும் தனிநபர்களை தீவிரவாதியாக கருத முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தவலா தெங்கலே, சித்தார்த் போசலே, மயூரி பகத் மற்றும் அனுராதா சோனுலே ஆகிய 4 பேரை தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புனேயில் கைது செய்தனர். இவர்கள் 4 பேர் மீதும், மத்திய அரசால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் அனைவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அபய் திப்சே, 4 பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக கடந்த வாரம் உத்தரவிட்டார்.
முன்னதாக மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் மிஹிர் தேசாய், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.அவர்களிடமிருந்து கம்யூனிஸ கொள்கை தொடர்பான நூல் மற்றும் சி.டி. கைப்பற்றப்பட்டது. இந்தக் காரணத்துக்காக இவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அரசுத் தரப்பு வாதம் ஏற்கத்தக்கதல்ல என்று தேசாய் வாதாடினார். இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி திப்சே, “சமூகப் பிரச்னைகளை முன்வைத்து குரல் கொடுத்ததில் தவறு இல்லை. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தேவையான ஒன்றுதான். இதே பிரச்னைகளை மையப்படுத்தி பல்வேறு முக்கிய தலைவர்கள் பேசி உள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபடுவோரை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்புபடுத்த முடியாது. கம்யூனிஸ கொள்கைகளை கடைப்பிடிக்கும் தனி நபர்களை தீவிரவாதிகளாக கருத முடியாது” என்று கூறினார்.
No comments:
Post a Comment