
புவனேஷ்வர்:போஸ்கோ உருக்காலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கியதை எதிர்த்து போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்புர் மாவட்டத்தில், கொரிய நிறுவனம் சார்பில் பெரும் எஃகு ஆலை நிறுவப்படவுள்ளது. இதற்காக ஏற்கெனவே 2,000 ஏக்கர் பரப்புள்ள நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆலையில் இருந்து கடற்கரைச் சாலை அமைக்கும் பணி நடந்தது. போஸ்கோ ஆலை இப்பகுதியில் அமைவதற்கு மக்கள் போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பெரும் மனித சங்கிலி போராட்டத்தை அடுத்து, கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணி தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோவிந்தப்பூர் பகுதியில், திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.கையகப்படுத்தும் குழுவினரையும், போலீஸாரையும் போராட்டக்காரர்கள் கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்தனர். மக்கள் போலீஸ் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில், 5 வாகனங்கள் சேதமடைந்தன. அப்பகுதியில் 400 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. முக்கிய சாலைகளை போலீஸார் மூடியுள்ளனர்.
இதுக் குறித்து போஸ்கோ எதிர்ப்பு இயக்க குழு கூறியதாவது: போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 6 பேர் காயமடைந்தனர். சிலரை போலீஸார் பிடித்து வைத்துள்ளனர். இதனை, துணை ஆட்சியர் சுர்ஜித் தாஸ் மறுத்துள்ளார்.கோவிந்தப்பூர் சுற்றுப் பகுதிகளிலும் சில இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. விபு பிரசாத் தராய் தலைமையில் தர்ணா போராட்டமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment