பக்கங்கள்

Monday, January 14, 2013

ஊடகங்களுக்கு நெறிமுறை வழிகாட்டுதல்:ப்ரஸ் கவுன்சிலை அணுகும் சிறுபான்மை கமிஷன்!


புதுடெல்லி:சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் குறித்த செய்திகள் வெளியிடுவதில் ஊடகங்களுக்கு நெறிமுறை வழிகாட்டுதலை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறுபான்மை கமிஷன், ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அணுகுகிறது.தேசிய மனித உரிமை கமிஷனின் சட்டப்படியான முழுகமிஷனின் கூட்டத்தில்  இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கமிஷனின் தலைவர் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிறுபான்மை கமிஷனின் உறுப்பினரான டாக்டர் அஜைப் சிங் இப்பிரச்சனையை கவனத்திற்கு கொண்டுவந்தார்.கொலை வழக்கில் கைதான நபரை நாம்தாரி என்ற சமுதாய பெயரில் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதை சுட்டிக்காட்டி அவர் தனது கவலையை வெளியிட்டார்.
டெல்லியைச் சார்ந்த தொழிலதிபர் பாண்டி சதாவை கொலைச் செய்த வழக்கில் முன்னாள் உத்தரகாண்ட் சிறுபான்மை கமிஷன் தலைவர் சுக்தேவ் சிங் நாம்தாரி கைதுச் செய்யப்பட்டார்.ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடும்போது அவரது பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக நாம்தாரி என்ற சமுதாயத்தின் பெயரை பிரயோகித்தன.இது நாம்தாரி சமுதாயத்தைக் குறித்து மோசமான எண்ணத்தை உருவாக்க காரணமானது என்று அஜைப் சிங் சுட்டிக்காட்டினார்.இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு நெறிமுறை வழிகாட்டுதல்களை(guidelines) வழங்குவது தொடர்பாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை அணுக முடிவுச் செய்யப்பட்டது.
இதுத் தொடர்பாக நீதிபதி பாலகிருஷ்ணன் குறிப்பிடுகையில்,’இது உண்மையிலேயே தீவிர அக்கறை செலுத்தவேண்டிய விஷயமாகும்’ என்று தெரிவித்த அவர், தேசிய சிறுபான்மை கமிஷன் இவ்விஷயத்தை ப்ரஸ் கவுன்சிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று பரிந்துரைத்தார்.

No comments:

Post a Comment