புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமலில் உள்ள சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டம்(AFPSA) மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்ற நீதிபதி வர்மா கமிஷனின் பரிந்துரை பெண்களுக்கும், இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
டெல்லியில் கல்லூரி மாணவி கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கிடைத்த பரிந்துரைகளில் பெரும்பகுதி’ அப்ஸாவை’ வாபஸ் பெறவேண்டும் என்பதாகும். இதன் தீவிரத்தை உணர்ந்த வர்மா கமிஷன் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற பரிந்துரையுடன் அப்ஸாவையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த சட்டத்தின் பாதுகாப்பு இல்லாமல் ராணுவத்தால் செயல்பட முடியாதா? என்று கேள்வி எழுப்பிய கமிஷன் உறுப்பினரும், முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலுமான கோபால் சுப்ரமணியம், இதன் திரைமறைவில் பாலியல் வன்கொடுமைகள் நியாயப்படுத்தப்படுவதாக அறிக்கையை வெளியிடும்போது தெரிவித்தார். மேலும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறிய பிறகும் இந்த சட்டம் தொடரத்தான் வேண்டுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசின் முன் அனுமதியில்லாமல் ராணுவத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று 1958-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டம் கூறுகிறது. மணிப்பூரில் மனோரமா தேவியை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைச் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு காரணம் இச்சட்டம் அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப்போல நூற்றுக்கணக்கான வழக்குகள் இச்சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் இருந்து ரிப்போர்ட் செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் பரிசீலித்த வர்மா கமிஷன் பாலியல் வன்முறைகளுக்கு ’அப்ஸாவை’ பாதுகாப்பாக பயன்படுத்தக் கூடாது என்றும், ராணுவத்தினரை பொதுச் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கவேண்டும் என்றும் பரிந்துரைச் செய்துள்ளது.
நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பெண்களின் உரிமைகளும், பாதுகாப்பும் இப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் தேவை என்று கமிஷன் அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.
மேலும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய சிறப்பு கமிஷனர்களை நியமிக்கவேண்டும். மோதல் சூழல் நிலவும் பகுதிகளில் பெண் விவகாரங்களை கையாண்ட நபர்களுக்கு இந்த குழுக்களில் உறுப்பினர் பதவியை வழங்கவேண்டும் என்று வர்மா கமிஷன் சிபாரிசுச் செய்துள்ளது. எல்லை மாநிலங்களில் அப்பகுதிகளில் உள்ள மக்கள் மீது ராணுவத்தினர் நடத்தும் அட்டூழியங்களையும் கமிஷன் விமர்சித்துள்ளது.
பெண் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், வழிகாட்டுதல்களை ராணுவத்தினருக்கான பயிற்சியில் உட்படுத்தவேண்டும் என்று வர்மா கமிஷன் அறிக்கை கூறுகிறது.
போலீஸ் ஸ்டேசன்களிலும் ராணுவ மையங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிச் செய்யவேண்டும். பெண்களையும்,குழந்தைகளையும் கைதுச் செய்யும்போதும், காவலில் வைக்கும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவேண்டும் போன்ற விஷயங்களையும் கமிஷன் எடுத்துரைக்கிறது. வகுப்புவாத கலவரங்களிலும், மோதல்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். வகுப்புவாத கலவரங்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக ஆதிக்கத்தை நிலைநாட்ட பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வர்மா கமிஷன் வழங்கியுள்ளது.
’அப்ஸா’ அமலில் உள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமை வழக்குகளிலு, கொலை வழக்குகளிலும் குற்றவாளிகளை தண்டிக்க மத்திய அரசின் அனுமதி எதற்கு? என்று முன்னர் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் குற்றவாளிகளை சாதாரண சட்டத்தின் அடிப்படையில்தான் தண்டிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
வடகிழக்கு பகுதிகளில் ஏழு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இச்சட்டம் ஜம்மு-கஷ்மீருக்கும் பரவலாக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. ஐக்கிய நாடுகள் அவை கோரிக்கை விடுத்த பிறகு இச்சட்டத்தை திருத்தவோ, வாபஸ் பெறவோ மத்திய அரசு முன்வரவில்லை.
No comments:
Post a Comment