பக்கங்கள்

Wednesday, May 2, 2012

ஆம்னஸ்டிக்கு வயது 50!


Amnesty International at 50
லண்டன்:வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை வரவேற்க காத்திருக்கும் லண்டன் நகரம் அதற்கு முன்பாக மற்றொரு முக்கிய திருவிழாவிற்கு தயாராகிறது.
உலகின் பிரபல மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் பொன் விழா கொண்டாட்டங்கள் வருகிற வியாழக்கிழமை துவங்குகிறது. பிரிட்டனில் பிரபல 50 கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும்.
‘சுதந்திரத்திற்கு சூடேற்றுவோம்(Toast to Freedom)’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு ஜெய்ன் பிர்கின், கார்லி சைமன், க்ரிஸ் கிறிஸ்டோஃபேர்ஸன் ஆகிய பிரபலமான கலைஞர்கள் தலைமை தாங்குகின்றனர்.
ஆம்னஸ்டிக்கும், அப்ஸர்வர் தின இதழுக்கும் இடையேயான உறவை நினைவுக்கூறும் விதமாக நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கார்லி சைமன் கூறுகிறார்.
1961-ஆம் ஆண்டு அப்ஸர்வர் நாளிதழில் வந்த செய்தி தான் ஆம்னஸ்டி எனும் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பை துவக்க பீட்டர் பெனன்ஸன் என்ற பிரிட்டீஷ்காரருக்கு உந்து சக்தியாக அமைந்தது. சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவித்த போர்ச்சுகல் மாணவர்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆம்னஸ்டி உருவானது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கமாக ஆம்னஸ்டி மாறியது.
1961-ஆம் ஆண்டு தான் இச்சம்பவம் நிகழ்ந்தது என்றாலும், பிரிட்டனுக்கு வெளியே ஆம்னஸ்டியின் பணிகள் துவங்கியது அடுத்த ஆண்டு அதாவது 1962-ஆம் ஆண்டு ஆகும்.
தற்பொழுது உலகின் பல்வேறு நாடுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாலண்டியர்களை(தன்னார்வ தொண்டர்களை) கொண்டுள்ள இந்நிறுவனம் மனித உரிமைக்கு கடைசி வார்த்தையாக மாறியுள்ளது. 1977-ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசும், 1978-ஆம் ஆண்டு ஐ.நாவின் ஃபீல்ட் ஆஃப் ஹியூமன் ப்ரைஸ் விருதும் ஆம்னஸ்டிக்கு கிடைத்தது.
தற்பொழுது மே 3-ஆம் தேதியை பொன்விழா கொண்டாட்டத்திற்கான தினமாக தேர்ந்தெடுக்க ஒரு காரணம் உண்டு. அன்றைய தினம் உலக பத்திரிகை சுதந்திர தினமாகும். ஆம்னஸ்டியின் உருவாக்கத்திற்கு பத்திரிகை சுதந்திரத்துடன் தொடர்பிருப்பதால் இத்தினத்தை தேர்வுச் செய்திருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான பில் ஷிப்லி கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ‘சுதந்திரத்திற்கு சூடேற்றுவோம்’ என்ற இயக்கம் மனித உரிமைக்காக பாடுபடும் கலைஞர்களின் கூட்டமைப்பாக மாறும் என ஷிப்லி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment