
புதுடெல்லி:சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
“சேது சமுத்திரத்தை தேசிய சின்னம் ஆக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலை என்ன?” என்று ஹரேன் ராவலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதும் அதே நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று பதில் அளித்தார்.
அவரது பதிலையே ‘மத்திய அரசின் கருத்து’ என நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சேது சமுத்திரம் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு எதிராக சுப்ரமணியம் சுவாமி உள்பட பல்வேறு நபர்களின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேது சமுத்திரம் விவகாரம் குறித்து நீதிமன்றம் ஆராயத் துவங்கியது.
No comments:
Post a Comment