பக்கங்கள்

Friday, April 27, 2012

தம்புள்ளை மஸ்ஜித்:புனிதமான இடம் என அறிவிக்க சட்டத்தில் இடமில்லை – இலங்கை வழக்குரைஞர்கள்!


dambulla masjid
கொழும்பு:இலங்கையில் தம்புள்ளை நகரில் முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமான 60 ஆண்டுகள் பாரம்பரியமிக்க மஸ்ஜிதை தங்களுக்கு புனிதமான பகுதியில் அமைந்துள்ளதால் இடிக்கவேண்டும் என கோரி மதவெறி பிடித்த புத்த பிக்குகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இலங்கை சிங்கள இனவெறி அரசும் ஆதரவளித்தது.
இந்நிலையில் புத்த மதத்தின் புனித இடமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கக்கூடாது என்று கூறி தம்புள்ளை மஸ்ஜிதை இடம் மாற்றும் இலங்கை அரசின் முயற்சி சட்டப்பூர்வமானதல்ல என்று வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடரவும் அவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
‘ஒரு பகுதியை புத்த மதத்துக்குப் புனிதமானது’ என்று அறிவிக்கும்படியான எந்தச் சட்டமும் இலங்கையில் இல்லை. அதனால், ஒரு பகுதியை ஒரு புனித இடம் என்று கூறி அங்கு மஸ்ஜிதையோ, ஹிந்து கோயிலையோ கட்டுவதற்குத் தடுக்க முடியாது’ என்று வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார்.
‘புனித இடம்’ என்று அறிவிப்பதற்குச் சட்டமே இல்லாதபோதும், இலங்கையின் சில இடங்கள் புனிதமானவை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.
1982-ம் ஆண்டில் ராங்கிரி-தம்புள்ளை பகுதியை ‘புனிதமானது’ என்று அப்போதைய அதிபர் ஜெயவர்த்தன அறிவித்தார். பின்னர் அனுராதபுரம் கோயில் பகுதியை ‘புனிதமானது’ என்று அரசு அறிவித்தது. இது தொடர்பாக சட்டமும் இயற்றப்பட்டது.
அனுராதபுரம் தொடர்பாக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகள் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், அது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டம் இணையத்தில் உள்ளது.
அனுராதபுரம் சட்டத்தில், புத்தமதத்தை தவிர பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. “அனுராதபுரத்தில் உள்ள புத்த வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று மட்டும்தான் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின் பிற விதிமுறைகள் அனைத்தும், பொதுவான வசதிகளைப் பற்றியும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதைப் பற்றியும்தான் கூறுகின்றன. இதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் ‘புனிதமானவை’ என்று அறிவிப்பதற்கு வசதியாக ‘நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் திருத்தச் சட்டம்’ என்கிற புதிய சட்டத்தைக் கொண்டுவர ராஜபட்ச அரசு முயற்சி செய்தது.
இந்தச் சட்டத்தின்படி, நாட்டின் எந்த இடத்தையும் புனிதமானது, பாதுகாக்கப்பட்டது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிப்பதற்கு புத்த சாதனம் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சகத்துக்கு அதிகாரம் வழங்கப்படும். இந்தத் துறை இப்போது பிரதமர் டி.எம். ஜெயரத்ன வசமிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்ற விவாதத்துக்கு வருவதற்கு முன்பே, மாகாணங்களின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
புனித இடம் என்று கூறி, தம்புள்ள பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் ஃஹைராவை அகற்றுவதற்கு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தமிழர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றன.
இதனால் அச்சமடைந்திருக்கும் இலங்கை அரசு, ‘மதச்சார்பற்ற’ வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. மஸ்ஜித், அனுமதிபெறாமல் கட்டப்பட்ட கட்டடம் என்றும், அனுமதி பெறாத பிற கட்டுமானங்களை இடிக்கும்போது மஸ்ஜிதும் இடிக்கப்படும் என்றும் அரசு கூறி வருகிறது.
இப்போது மஸ்ஜிதைக் காப்பாற்றுவதற்கு இருக்கும் ஒரே வழி, அது அரசிடம் முறையாக அனுமதி பெற்றுக் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுவதுதான். 1964-ம் ஆண்டிலேயே நிலம் வாங்கப்பட்டதற்கான கிரையப் பத்திரம் முஸ்லிம்களிடம் உள்ளது. ஆனால், கட்டடம் சட்ட விரோதமானதல்ல என்பதையும் முஸ்லிம்கள் நிரூபிக்கவேண்டும்.

No comments:

Post a Comment