Sunday, March 4, 2012

எக்ஸிட் போல்:பஞ்சாப், உத்தரகாண்ட் – செல்வாக்கை இழக்கும் பா.ஜ.க!


Tight finish
புதுடெல்லி:ஐந்து மாநிலங்களுக்கு நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தல்களில் உ.பியில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில் மணிப்பூர், உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸிற்கு சாதகமான சூழல் உருவாகும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
பஞ்சாபில் ஆளும் சிரோன்மணி அகாலி தளம் – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் இழுபறி நிலை இருக்கும். காங்கிரஸ் கட்சி 48 முதல் 60 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 51 முதல் 63 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகள், பிற கட்சிகளுக்கு 3 முதல் 9 இடங்கள் கிடைக்கும்.
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 44 இடங்களில் வென்றது.
அதே நேரத்தில் உத்தராகண்டில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 31 முதல் 41 இடங்களில் வெற்றி பெறும். பாஜகவுக்கு 22 முதல் 32 இடங்கள் மட்டும் கிடைக்கும் என்று தெரிகிறது. சுயேச்சை, பிற கட்சிகள் 5 முதல் 10 இடங்களைப் பிடிப்பர்.
கடந்த தேர்தலில் பாஜக 34 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றன. சுயேச்சை, பிற கட்சியினர் 14 இடங்களைக் கைப்பற்றினர்.
பாஜக ஆட்சிக்கு எதிரான அலை உத்தரகாண்டில் வீசுவதால் அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருதப்படுகிறது. முதல்வரை தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன் மாற்றியது உள்ளிட்ட பாஜகவின் மோசமான நடவடிக்கைகள் காங்கிசுக்கு  அங்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிகிறது. மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரசுக்கு 24 முதல் 32 இடங்கள் கிடைக்கும். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 30 இடங்களில் வென்றது.
முக்கிய எதிர்க் கட்சியான மக்கள் ஜனநாயக முன்னணி 5 முதல் 11 இடங்களுடன் 2-வது இடத்தையும், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் 7 முதல் 13 இடங்களில் வெற்றி பெறும். சுயேச்சைகள், பிற கட்சிகளுக்கு 10 முதல் 18 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தி வீக், சிஎன்என் – ஐ.பி.என் வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment