
வாஷிங்டன்:போபால்
விஷவாயுக் கசிவு சம்பவம் தொடர்பாக நீதி கேட்டுப் போராடி வருபவர்களை டோ
கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்காக ‘ஸ்ட்ரேட்ஃபார்’ என்ற அமெரிக்க தனியார்
நிறுவனம் உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் கூறுகிறது.
டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்காக வேவு
பார்க்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ‘ஸ்ட்ரேட்ஃபார்’ என்ற அமெரிக்க
தனியார் அமைப்பின் லட்சக்கணக்கான மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிடத்
தொடங்கியிருக்கிறது. இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் 2004 ஜூலை முதல் 2011
டிசம்பர் வரை அனுப்பப்பட்டவை.
‘உளவுத் தகவல்களை வெளியிடும் நிறுவனம்’
என்கிற பெயரில் இயங்கிவரும் மிகப் பிரபலமான ஸ்ட்ரேட்ஃபார் நிறுவனம், உளவுப்
பணிகளில் நேரடியாக ஈடுபட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் குற்றம் சாட்டியிருப்பது
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோ கெமிக்கல்ஸ் தவிர, லாக்ஹீட்
மார்ட்டின், நார்த்ரோப் க்ரூக்மன் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களுக்காகவும்,
அமெரிக்க உள்துறை, அமெரிக்க கடலோரக் காவல்படை, உளவுத்துறை ஆகிய அரசு
அமைப்புகளுக்காகவும் ஸ்ட்ரேட்ஃபார் வேவு பார்த்திருப்பதாக விக்கிலீக்ஸ்
வெளியிட்டிருக்கும் மின்னஞ்சல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
போபால் சம்பவம் தொடர்பான நீதிமன்ற
வழக்குகளின் போக்கு, போராட்டக்காரர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள், எங்கு
தங்குகிறார்கள், அவர்களது திட்டம் என்ன என்பவை பற்றி ஸ்ட்ரேட்ஃபார் உளவு
பார்த்திருப்பதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் மின்னஞ்சல்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை ஸ்ட்ரேட்ஃபார் நேரடியாக
மறுக்கவில்லை. அதே நேரத்தில், தங்களிடமுள்ள அனைத்து அறிக்கைகளையும் இலவசமாக
வழங்குவதாக அதன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தாங்கள்
அனுப்பியது போலவே பலர் வெளியிட்டிருக்கும் மின்னஞ்சல்கள் ‘ஸ்பேம்வேர்’,
‘மால்வேர்’ போன்ற மோசடியானவை என்று அந்த அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் தலைவர்கள், அரசு அமைப்புகள்,
ராணுவம் போன்றவற்றை வேவு பார்ப்பதற்காக உலகம் முழுவதும் செயல்படும்
வகையிலான தகவல்கள் அளிப்போர் நெட்வொர்க்கை ஸ்ட்ரேட்ஃபார்
அமைத்திருப்பதாகவும், அவர்களுக்கு சுவிஸ் வங்கிக் கணக்குகள், ப்ரீபெய்ட்
கிரடிட் கார்டுகள் மூலமாக பணப் பட்டுவாடா நடந்திருப்பதாகவும் விக்கிலீக்ஸ்
குற்றம் சாட்டியிருக்கிறது.
தூதரக அதிகாரிகள், அரசு ஊழியர்கள்,
பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோரும் வேவு பார்க்கும் பணியில்
ஈடுபட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
No comments:
Post a Comment