Thursday, February 23, 2012

தீவிரவாத எதிர்ப்பு மையம் துவங்குவது தற்காலிகமாக நிறுத்தம்


PM assured NCTC only after consultations  Mamata
புதுடெல்லி:நேசனல் கவுண்டர் டெரரிசம் செண்டர்(என்.சி.டி.சி) மார்ச் 1-ஆம் தேதி துவங்குவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மாநில முதல்வர்களுடன் கலந்தோலோசித்த பிறகு மையம் துவங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார் என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மமதா உள்பட காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் தீவிரவாத எதிர்ப்பு மையம் துவங்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். மாநில முதல்வர்களுடன் இவ்விவகாரம் தொடர்பாக கலந்தாலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நேற்று முன்தினம் பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பிறகு நேற்று மம்தா பிரதமரை சந்தித்துள்ளார். முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்றும், அதுவரை தீவிரவாத எதிர்ப்பு மையத்தை துவங்குவதை நிறுத்தி வைக்கவும் மம்தா பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். ஒரு புறம் ஆலோசனை நடக்கும் வேளையில், மறுபுறம் தீவிரவாத எதிர்ப்பு மையத்தை துவங்கமுடியாது என்ற தனது கருத்தில் பிரதமர் உடன்பட்டார் என்று மம்தா தெரிவித்தார்.
இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) தலைமையகத்தில் இயங்கும் என்.சி.டி.சிக்கு மாநில அரசுகளின் அனுமதியில்லாமல் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று மம்தா உள்பட காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தீவிரவாதத்தை தடுக்கும் எந்த முயற்சிக்கும் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய மம்தா, மாநிலங்களின் அதிகாரங்களுடன் தொடர்புடைய காரியங்களில் முடிவு எடுக்கும் வேளையில் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
2001-இல் என்.டி.எ(பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) ஆட்சியில் தீவிரவாத எதிர்ப்பு மையம் குறித்த ஆலோசனை பரிந்துரையில் இருந்தது என்று நேற்று முன் தினம் மம்தா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஏன் மேலும் 10 வருடங்கள் காத்திருந்தீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார். உண்மையில் இந்த தீவிரவாத எதிர்ப்பு மையம் துவங்குவதற்கான தேவை என்ன? என்பது குறித்து தெரியவில்லை என்று மம்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment