
டமாஸ்கஸ்:சவூதி அரேபியாவைத் தொடர்ந்து ஜி.சி.சியின் அனைத்து வளைகுடா நாடுகளும் சிரியாவுக்குச் சென்றுள்ள அரபு லீக்கின் கண்காணிப்புக் குழுவில் தங்களது பிரதிநிதிகளை வாபஸ் பெற்றுள்ளன.
சிரியாவில் தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அரசு மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ஜி.சி.சி கோரிக்கை விடுத்துள்ளது. அரபு லீக்கின் தீர்மானத்தை கடைப்பிடிக்க போதிய நடவடிக்கைகளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எடுக்கவேண்டும் என ஜி.சி.சி நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே,அரபு லீக்கின் கண்காணிப்புக் குழு சிரியாவில் பணியை தொடரும் என அரபுலீக் தெரிவித்துள்ளது.
சில அரபு நாடுகள் சிரியாவுக்கு எதிராக தீட்டியுள்ள சதித் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாலித் அல் முஅல்லம் குற்றம் சாட்டினார். கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ள அரபு லீக்கின் கண்காணிப்புக் குழுவில் இருந்து பிரதிநிதிகளை வாபஸ் வாங்குவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியா அறிவித்தது. அரபு லீக்கின் பரிந்துரைகளை சிரியா அங்கீகரிக்காததால் மேலும் ஒரு மாதம் கண்காணிப்புக் குழுவின் பணி சிரியாவில் தொடரும் என அரபு லீக் கெய்ரோவில் நடந்த கூட்டத்தில் தீர்மானித்தது.
இந்நிலையில் ஜி.சி.சி நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.
அரபு நாடுகளும், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளும் சிரியாவில் அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற முன்வரவேண்டும் என சவூதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் சவூத் அல் ஃபைஸல் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அரபு லீக் கண்காணிப்புக் குழு சிரியாவுக்கு வந்த பிறகு தாக்குதல் குறைந்துள்ளதாக குழுவின் தலைவர் சூடானின் ராணுவ ஜெனரல் முஹம்மது அல்தாபி திங்கள் கிழமை கூறினார். சூடானின் தர்ஃபூரில் தாக்குதலை நடத்தியவர் என குற்றம் சாட்டி அல்தாபியிடம் அரபு லீக்கின் கண்காணிப்புக் குழு தலைமை பதவியை வழங்கியதற்கு மேற்கத்திய ஆதரவு அமைப்புகள் விமர்சித்திருந்தன.
No comments:
Post a Comment