பக்கங்கள்

Saturday, August 29, 2015

பட்டேல் கிளர்ச்சி - இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து!

பட்டேல் கிளர்ச்சி - இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து!குஜராத்தில் இடஒதுக்கீடு கேட்டு    Patidar Anamat Andolan Samiti (PAAS)  எனும் அமைப்பினரால் ஒருவார காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டேல்களின்  கிளர்ச்சி பெரும் வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது.
அம்மாநிலத்தில்  சற்றொப்ப 15 விழுக்காடு உள்ள பட்டேல்கள், அரசியல் ஆதிக்கத்திலும்  பொருளாதரத்திலும்  வளர்ச்சி பெற்று முன்னேறிய  சமூகத்தினராகத் திகழ்கின்றனர். அச்சமூகத்தினர் பலரும் அம்மாநிலத்தில் அமைச்சர்களாகவும் சட்ட மன்ற , நாடாளும் மன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்  .பாபுபாய் பட்டேல் , சிமன்பாய் பட்டேல் கேஷுபாய் பட்டேல் ஆகியோர் அம்மாநிலத்தில் முதல்வர்களாக இருந்துள்ளனர். தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் சுமார் 40 சதவிதம் பேர் பட்டேல்கள். முதல்வர்  ஆனந்தி பென் மற்றும் ஏழு கேபினட் அமைச்சர்கள் பட்டேல்களே ஆவர்.
.
முற்பட்ட வகுப்பினராக இருக்கும் தங்களைப்  பிற்பட்ட வகுப்புக்கு மாற்றி , கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கடந்த 50 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டம், ஒருங்கிணைப்பாளர்  ஹர்த்திக் பட்டேல் (Hardik Patel),  கைது செய்யப்பட்டதால்  அம்மாநில உள்துறை அமைச்சர் ரஜனி படேலின்  இல்லத்தை எரிக்கும் அளவு  கலவரமாக வெடித்தது.  பேருந்துகள் உட்படப் பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், 7.5 விழுக்காடு பட்டிகை சாதியினருக்கும் 15 விழுக்காடு பழங்குடியினருக்கும் 27 விழுக்காடு இதர பிற்பட்ட வகுப்பினருக்கும்  என மொத்தம் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு  உச்சநீதி மன்றம்  வழங்கிய தீர்ப்பில் மொத்த ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது எனக்கூறப்பட்டுள்ளதன்  பின்னணியில், பட்டேல்களின் இடஒதுக்கீட்டுக் கிளர்ச்சி அலசப்பட வேண்டும்.
 
1981ஆம் ஆண்டில்,  குஜராத்தை  காங்கிரஸ் கட்சி ஆண்ட போது  முதல்வராக இருந்த மாதவ் சிங் சோலங்கி, "பக்ஸி   ஆணையத்தின்" (BAXI COMMISSION) பரிந்துரையின் பேரில்  இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி நடந்து, 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.  இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கிளர்ச்சியில்  பட்டேல்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.  1985ஆம் ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சோலங்கி, க்ஷத்ரிய ஹரிஜன் ஆதிவாசி முஸ்லிம் KHAM ஆதரவால் பெரும்பான்மை இடங்கள் பெற்று  மீண்டும்  முதல்வரானார். அதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த பட்டேல்கள் இடஒதுக்கீட்டுப் பிரச்சனையால் தம் ஆதரவை பாஜகவுக்கு வழங்கினர்.

இட ஒதுக்கீட்டுக் எதிரான பட்டேல் சமூகம் இப்போது இடஒதுக்கீடு கேட்டுப்  போராடுகிறது.  'குஜராத் மாடல்' மற்றும் 'ஒளிரும் குஜராத்' போன்ற "மோடி  முழக்கங்கள்" வெறும் வண்ணப் பூச்சு என்பதையும்  அஸ்திவாரம் ஆடிக்கொண்டிருக்கிறது என்பதையும்  வெறித்தனமான     'மோடி ஆதரவாளர்களான' பட்டேல் இளைஞர்களின் போராட்டம் வெளிப்படுத்தி விட்டது. நடுத்தர மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தங்களின் குல வழக்கப்படி, தமது  பொருளாதாரத்தை, வேளாண்மையிலும்  சிறு மற்றும் குறு தொழில்களிலும் முதலீடு  செய்து வந்தனர். அரசு வேலைகளில் அக்கறை காட்டியிருக்கவில்லை. ஆனால், மோடியின் குஜராத் மாடல் வளர்ச்சியும் ஒளிரும் குஜராத் முழக்கமும் பெரும் முதலீடுகளுடன் துவக்கப்படும் வணிகத்தையும் தொழிற்சாலைகளையும் அனுமதித்ததால், இவற்றின் முன் நிற்க இயலா  சிறு மற்றும் குறு தொழில்கள் அழிந்து போயின.

ரிஸர்வ் வங்கி அறிக்கையின் படி குஜராத் அரசில் பதிவு பெற்ற  தொழிலங்களுள் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலகங்கள் நலிந்த நிலையில்  இருப்பதாகவும்,  அத்தொழில்களில் ஈடுபட்டுள்ள 21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.  பாதிக்கப்பட்டுள்ளவர்களுள்  பெரும்பான்மை பட்டேல் சமூகத்து மக்களே! தொழில் இழந்த பட்டேல்கள் அரசு வேலையையும் மருத்துவர், பொறியாளர் போன்ற படிப்புகளையும் நாடிச்செல்ல நேரிட்டது. ஆனால், இடஒதுக்கீடு காரணமாக அவர்கள்  அதில் வெற்றி பெற இயலவில்லை. கடந்தாண்டு நடந்த அரசு வேலை  வாய்ப்பு மேளாவில், பள்ளி ஆசிரியர், காவல் துறை மற்றும் அரசு அலுவலர் பணிகளுக்கான தேர்வில் பட்டேல்கள் புறக்கணிக்கப்பட்டனர். இது வட குஜராத்தில் முதல் பொறியைத் தெறிக்க வைத்தது. அப்பொறி குஜராத்தின் இதர பகுதிகளில் தீயாய்ப் பரவி குஜராத் அரசையும் பாஜகவையும் நிலைகுலைய வைத்து விட்டது.

பட்டேல்களுக்கு  இட ஒதுக்கீடு அளிப்பதாக இருந்தால் மொத்த ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கக் கூடாது  என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 27 விழுக்காடிலேயே கை வைக்க வேண்டி வரும். இதுவரை  27%  இட ஒதுக்கீடை அனுபவித்து வந்த இதர பிற்படுத்தப் பட்ட 146  சாதியினர், பட்டேல் சமூகத்துக்கெதிராக   “Save Reservation Committee” எனும் அமைப்பின் பேரில்  ஒன்றிணைந்துள்ளனர். இது சாதிகளுக்கிடையேயான   மோதலாக உருமாறினால், மீண்டும் 1981 இல் நடந்த கலவரம் போல் மற்றொரு கலவரம் உருவாக வாய்ப்புண்டு.

தற்போது நடந்து வரும் கலவரங்களின் பின்னணியில் உள்ளவர் யார்? .ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞனின் பின்னால் இப்படி ஒரு பெரும் கூட்டம் திரண்டது எப்படி? அதற்கான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் திட்டமிடலில் யார் உள்ளனர்? இவை விடை தேட வேண்டிய வினாக்களாகும்.

ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த தங்கராஜ், பாஜக தலைவர் அமீத் ஷாவை வைத்து , .இம்மாதத் துவக்கத்தில் மதுரையில்  நடத்திய  தேவேந்திர சங்க மாநாட்டில் இட ஒதுக்கீட்டுக்கெதிரான கருத்துகள்  பேசப்பட்டன.

"இடஒதுக்கீட்டை ரத்து செய்யப் போகிறோம் என்று கூறினால் மிகப்பெரிய எதிர்ப்பு வெடிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட பாஜகவினர் மிகவும் தந்திரமாக தேவேந்திரர்குல வேளாளர்களின் பெயரால் ஒரு சிலரைக்கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தி. ‘தங்கள் சமூகத்தை அட்டவணை சாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கிவிடவேண்டும்; தங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை’ எனப் பேசச் செய்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது கவனிக்கத்தக்கதாகும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் நடத்தி அவர்கள்தான் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, 'இட ஒதுக்கீடு வேண்டாம் என அவர்களே சொல்கிறார்கள். அதனால் எஸ்சி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்தாலென்ன' என்ற பிரச்சாரத்தை நாடெங்கும் மேற்கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டமா  என்பதை பாஜக விளக்கவேண்டும்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்தார்..

இடஒதுக்கீடே தேவையில்லை என இந்துத்துவா அமைப்புகள் கூறுகின்றன.  ."இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.   இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களும்  இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டுப்  பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது. குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு  ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய கட்டாயம்  எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது" என வி எச் பி யின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியுள்ளார்.

அண்மையில் வி எச் பி யின் உயர் மட்டத் தலைவர் ஒருவரை ஹர்திக் பட்டேல் சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இப்போது குஜராத்தில் நடந்து வரும் கிளர்ச்சியால் நரேந்திர மோடிக்கும்  ஆனந்தி பென்னுக்கும் தலைவலி தருவதோடு, அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு என்பதையே ஒழித்து விடுவது  என்பதுதான் சங் பரிவாரின் திட்டம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு ஹர்திக்  அளித்துள்ள பேட்டியில்,

"எங்கள் சமூகத்தினர் நன்கு படித்து 80%, 90% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்கூட அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற ஒரு நடைமுறை இருப்பதால்தான் எங்களுக்கு இந்த அவலம் நேர்கிறது.

நல்ல மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காததால் நாங்கள் எங்கள் குடும்ப தொழிலையே மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படுகிறோம். வேலைவாய்ப்புகள் பட்டியல் இனத்தவரால் பறித்துக் கொள்ளப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் பொதுப் பிரிவிலும் வேலை பெறுகின்றனர்.

எனவே, இந்த அரசு ஒன்று இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் படேல் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் இணைக்க வேண்டும். இரண்டில் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.

இந்த நாட்டை இடஒதுக்கீட்டு முறையில் இருந்து விடுவியுங்கள்; இல்லாவிட்டால் மக்கள் அனைவரும் இடஒதுக்கீட்டுக்கு அடிமைகளாக கிடப்பர்.  இந்த நாட்டின் அரசியலையும் இடஒதுக்கீடு போன்ற சில கட்டமைப்புகளையும் மாற்றியமைப்பதே என் லட்சியம்" என்று கூறியுள்ளது அவர்களின் உள்ளக்கிடக்கையைத் தெளிவாக்கி விட்டது.
இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன், சச்சார் கமிஷன்,  பக்ஸி கமிஷன் போன்றவற்றின் பரிந்துரைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, வருணாசிரம அமைப்பை ஏற்படுத்தும் ஆபத்து குஜராத் கிளர்ச்சியால் உருவாகாமல் தடுப்பது சமூக அக்கறையாளர்களின் கடமையாகும்.

No comments:

Post a Comment