கெய்ரோ: எகிப்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று இராணுவ சர்வாதிகார அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த கோடைக் காலத்திற்கு முன்பாகவே எகிப்தில் தேர்தல் நடைபெறும் என்று சர்வாதிகார இராணுவ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் நபீல் அல் ஃபஹ்மி கூறியுள்ளார்.
மேலும் ஃபஹ்மி கூறியது: தேர்தலுக்குப் பிறகு இடைக்கால அரசு இராஜினாமா செய்யும். இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டி (எஃப்.ஜே.பி.) தேர்தலில் போட்டியிடலாம்.
அக்கட்சி தற்போது சட்டத்திற்கு உட்பட்டே எகிப்தில் இயங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். எகிப்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முஹம்மது முர்ஸி இராணுவ சதிப் புரட்சி மூலம் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை விதிக்கப்பட்டது.
முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். முர்ஸியை பதவி நீக்கம் செய்த இராணுவ சர்வாதிகார அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுப் பெற்று வருகிறது.
இந்நிலையில் முர்ஸியை அவருடைய குடும்பத்தினர் பர்க் அல் அரப் சிறையில் சந்தித்தனர். சதிப் புரட்சிக்குப் பிறகு முதன்முறையாக முர்ஸியை அவரது குடும்பத்தினர் சந்திக்கின்றனர்.
இராணுவ சர்வாதிகார அரசின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஏராளமான பெண்கள் கெய்ரோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடத்தினர். இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய கெய்ரோ பல்கலைக்கழக மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களை இராணுவம் இந்த வாரம் கைது செய்திருந்தது.
No comments:
Post a Comment