பக்கங்கள்

Friday, October 25, 2013


sattasabaiஇலங்கையில் வரும் நவம்பர் 15ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. பெயரளவிற்கு கூட பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க கூடாது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் வாழ வழி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எடுக்கும் வரை இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து தற்காலிகமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பேரரசை தமிழக பேரவை வலியுறுத்தி கேட்டு கொள்கிறது.

இந்தியாவின் முடிவை இலங்கைக்கு இந்தியா உடனே தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து இலங்கையில் கொடூரங்கள் நடந்துள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஐ.நா.வை வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம்.
இலங்கை அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தினோம். இது போல் காமன்வெல்த் நாட்டு மாநாட்டில் பங்கேற்க கூடாது என கடிதம் எழுதியும் மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை.
திடமான தீர்க்கமான முடிவுகள் எடுக்கவில்லை. கனடா பிரதமர் கூட நான் பங்கேற்க மாட்டேன் என ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். பெயரளவில் ஒருவரை மட்டுமே அவர் அனுப்ப முடிவு செய்துள்ளார். குறைந்த அளவு தமிழர்கள் வாழும் கனடாவே இந்த முடிவு எடுத்துள்ளபோது, எட்டு கோடி தமிழர்கள் வாழும் இந்தியா பெயரளவில் கூட இந்த மாநாட்டில் பங்கேற்க கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
தீர்மானத்தை வரவேற்கிறது தி.மு.க.
தி.மு.க. இந்தத் தீர்மானத்தை வரவேற்கிறது. இது குறித்து சட்டசபையில் தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
தமிழக அரசின் இந்த் தீர்மானத்தை தி.மு.க.வும் ஆதரித்து வரவேற்கிறது. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என தி.மு.க.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கருணாநிதியும் குரல் கொடுத்து வருகிறார். டெசோ அமைப்பும் எதிர்த்துள்ளது. தி.மு.க. செயற்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது.
இந்தத் தீர்மானத்தின் மீது தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி சார்பிலும் உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment