பக்கங்கள்

Thursday, July 4, 2013

சி.பி.ஐ சுதந்திரமாக செயல்பட சட்டத்திருத்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம்!

SupremeCourt

புதுடெல்லி:சிபிஐ அமைப்பு அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க,
நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்டதாக சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சின்ஹாவின் கருத்தின் அடிப்படையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சிபிஐ அமைப்பை கூண்டுக் கிளி போல மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டியது. வெளியாரின் குறுக்கீடு இல்லாமல் சுதந்திரமாக சிபிஐ அமைப்பு செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு கடந்த மே மாதம் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், 41 பக்க பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில் சிபிஐ அமைப்பை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரைகள் மற்றும் மத்திய அமைச்சரவையின் முடிவு ஆகியவை இந்தப் பத்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
இதில் மேலும் கூறியிருப்பதாவது: சிபிஐ அமைப்பு சுதந்திரமாக செயல்படுவதற்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். இதன்படி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகள் மீதான சிபிஐ விசாரணையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கண்காணிக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாது. மற்ற வழக்குகளை மத்திய அரசு கண்காணிக்கும். இதன் இயக்குநரை நியமிப்பதற்கு பிரதமர் தலைமையில் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெறுவர்.
இப்போது தில்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் கீழ் சிபிஐ அமைப்பு இயங்கி வருகிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை தலைவராகக் கொண்டு, உள் துறை (பொறுப்பு) செயலாளர் மற்றும் மத்திய அமைச்சரவை செயலாளர் (ஒருங்கிணைப்பு மற்றும் குறை தீர்ப்பு) ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையில் இயக்குநர் நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு 3 மாதத்துக்குள் அனுமதி தராவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாகவே விசாரணை நடத்த சிபிஐக்கு அதிகாரம் வழங்கப்படும். சிபிஐ அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக “பொறுப்பு ஆணையம்’ நிறுவப்படும். இந்த ஆணையம், தலைவர் மற்றும் 3 முழு நேர உறுப்பினர்களுடன் செயல்படும். இவர்களை உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார்.
சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும். அதற்கு முன்னதாக பதவி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆய்வு செய்து பரிந்துரை செய்வார். காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கும், அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கும் சிபிஐ இயக்குநர் பரிந்துரை செய்ய வகை செய்யப்படும்.தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரை தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் சிபிஐ இயக்குநரை (விசாரணை) மத்திய அரசு நியமிக்கும். இந்த தேர்வுக் குழுவில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை செயலாளர், உள் துறை செயலாளர் மற்றும் சட்ட விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். சிபிஐ இயக்குநர் இக்குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
சிபிஐ இயக்குநருக்கும், விசாரணை இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அட்டார்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்கப்படும். அதன் அடிப்படையில் இயக்குநர் இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment